17 December 2006

கனியிருப்ப காய் கவர்ந்தற்று
இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இந்த குறளில் மறைந்திருக்கும் உண்மை என்னவென்றால் , இனிமையாய் கேட்கும் பல நல்ல சொற்கள் நம்மிடையே இருக்கையில் மனதை புண்படுத்தும் சொற்களை நாம் ஏன் தேர்ந்தெடுக்கின்றோம்?

சொல்பவர்களை மட்டுமல்லாமல் அந்த சுடும் சொற்களைக் கேட்பவர்களின் மனதையும் அல்லவா காயப்படுத்துக்கின்றன? அவை அறிந்து பேசு என்று தெரிந்து தான் சொல்லி இருக்கிறார்கள். நாம் பேசும் வார்த்தைகள் எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களின் மனதில் வடுக்களைப் பதிய வைக்கக்கூடாது.

தீயினால் சுட்டப் புண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடு.

சுட்டெரிக்கும் தீயினால் வந்த காயம் நாள் போக்கில் நமது உள்ளத்தில் எந்த ஒரு வடுக்களையும் விட்டு செல்வது கிடையாது. ஆனால் நம் நரம்பு இல்லாத நாக்கினால் வரும் கடும் சொற்கள், அதனால் உண்டாகும் காயங்கள் மனதில் எப்பொழுதும ஆறாத காயங்களாக தான் இருக்கும்.

சொன்ன சுடு சொற்களுக்காக ஒருவர் நம்மை மன்னித்துவிட்டேன் என்று கூறினாலும் அவர் நம்மை பார்க்கும் பொழுது எல்லாம் அந்த சொல் நம் மனதில் வந்து வலிக்கவே செய்யும்.

ஆகவே, எப்பொழுதும் வார்த்தைகளை அள்ளி விசாமல், அந்த சொல் பிறரை நோகடிக்குமா என்று யோசித்து பிறகே நமது விவாதங்களை முன் வைக்க வேண்டும்.