08 February 2007

அரசியல்வாதி ஆக மாட்டேன்....

அரசியல் என்றாலே எனக்கு வெறுப்பு.. ஏனோ தெரியவில்லை.. அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன். ஏன்?

பெரிய காரணம் ஒன்றுமில்லை. அரசியலில் சேர்ந்தாலே பூவுடன் சேர்ந்து நாறும் மணக்கும் என்று சொல்வார்கள். நாம் நல்லது செய்தாலும் நம்மை சுற்றி நடக்கும் கெட்டதையும் நம் தலையில் திணித்துவிடுவார்கள். என்னதான் நல்லது செய்தாலும் நமக்கு எப்பொழுதும் நல்ல பெயர் மட்டுமே கிடைப்பதில்லை. அனைவரிடமும் திட்டு வாங்குகிற அளவிற்கு எனக்கு மன தைரியமில்லை.

அது மட்டுமல்லாமல் இன்னும் சிலர் சொல்வார்கள், நீ என்ன தான் நல்லவனா இருந்தாலும் உன்னை அங்க மாற்றிடுவாங்கனு.. அதான்.. நல்லவனா இருக்கிற என்னை தீயவனா மாற்றிவிட்டால்? அப்புறம் நான் நினைத்தாலும் என்னை நான் மாற்ற முடியாது...
ஆனால் யார் அப்பொ ஊரை திருத்துவது? யாராவது ரொம்ப நல்ல தைரியசாலி, எதுக்கும் பயப்படாம, யாராலும் தன்னை மாற்ற முடியாதுனு நினைக்கிறவங்க ஆகலாம்.

ஆனால் ஒன்னு.. கண்டிப்பா அவர் இறந்த பிறகு அவர் நல்லவரா கெட்டவரா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடக்கும்.. ஊர் எங்கயும்....

2006 End

கால்கள் வலியை தாளாமல் தள்ளாடி கீழே விழ எத்தனித்தது... மங்கலாக சற்று தூரத்தில் ஒரு சிறு ஒளி வட்டம் கண்ணுக்கு தெரிந்தது. இந்த வெளிச்சமில்லாத இருண்ட இடத்தில் இருந்து வெளியேற கால்கள் துடித்தன. முட்களின் மேல் நடந்து வந்ததால் ஏற்பட்ட வலி இன்னும் ஆறவில்லை. முன்பை விட வலி கொஞ்சம் குறைந்திருந்தாலும், முட்களின் கூர்மையை அவை இன்னும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன.

கால்கள் எழுந்து, தான் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்த்தன. கண்களுக்கு எட்டிய தூரம் வரை அதிகம் முட்களாகவே இருந்தது. ஆனாலும் ஆச்சரியமாக ஆங்காங்கே சில வண்ணப் பூக்களும் மலர்ந்து இருந்தன. முட்களை பார்க்கும் பொழுது கண்கள் குளமாகியது. அந்த சம்பவங்கள் மட்டும் ஏன் தான் பசுமரத்தாணி போல மனதில் இருக்கின்றனவோ? அவைகளை மனம் மறக்க நினைத்தாலும் இந்த மூளையால் மறக்க முடியவில்லை. அதுதான் நமது இயல்போ?

ஒரு சில பூக்களும் இருக்கின்றனவே! எதற்காக அவை மலர்ந்து இருக்கின்றன? மூளை யோசித்தது. என்ன ஆயிற்று?அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது? கடந்த வந்த இந்த முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களில் என்ன நடந்தது என்று மூளையில் பதிவா செய்ய முடியும்?

கைகள் மெதுவாக குறிப்பேட்டை பையிலிருந்து எடுத்து புரட்ட தொடங்கியது. அய்யோ பாவம் அந்த குறிப்பேடு வெண்மையாக இருந்தது. ஒரு துளி மையின் கரை கூட அதில் இல்லை. அதைப்பார்த்து தன்னைதானே கடிந்துக் கொண்டது அந்த கைகள். எத்தனை தடவை மூளை சொல்லியிருக்கும் அன்று நடந்தவற்றை பதிவு செய்ய, ஆனால் சோம்பேறித்தனத்தினால் அதை செய்யாமல் இருந்ததற்கு இன்று தண்டனையாக எப்பொழுது என்ன நடந்தது என்பது சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

சரி மெதுவாக சென்று அந்த ஒளிவட்டத்தை அடைந்த பிறகாவது நாம் இனி சந்திக்கப்போகும் நாட்களையும் அந்நாட்களில் நடக்கும் நிகழ்வுகளையும் எழுத தொடங்கலாமே.... ...இதோ மெதுவாக நடக்க தொடங்குகிறேன்...... நீங்களும் கூடத்தானே?அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..