14 June 2007

நட்பு...

மலரும் மொட்டுக்கள் இரண்டு கைக்கோர்த்து அந்த பூங்காவில் வலம் வந்துக்கொண்டிருந்தன.

"எனக்கு அந்த பட்டாம்பூச்சி வேணும்" தனது நண்பனிடம்கேட்டாள் தேவி.

"அய்யோ நான் பிடிக்க மாட்டேன். அம்மா சொன்னாங்க பட்டாம்பூச்சி கையைக் கடிக்குமாம். நான் பிடிக்க மாட்டேன்" என்றான் அச்சத்துடன் அந்த வால்குட்டி மாறன்.

"விஷ்ணு... மற்றும் வசந்த்.. வாங்க, நேரம் ஆச்சு .." ஒரு நடுத்தர வயது பெண்மணி இரண்டு வாண்டுகளையும் அழைத்தாள். தேவியின் முழுப்பெயர் விஷ்ணுதேவி மாறனின் பெயரும் வசந்த மாறன். இருவருக்கும் ஒரு இரண்டு வயது வித்தியாசம் தான்.

அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை அல்ல. அவர்களின் உறவின் பாலம் நட்பு, நட்பு மட்டுமே.

அண்டைவிட்டாரின் மகன் தான் வசந்த். அவனது வயது ஐந்து. விஷ்ணுவின் வயதோ மூன்று. பிறந்ததிலிருந்தே இவர்களின் நட்பு வளர்ந்தது என்று சொல்லலாம். வசந்த் வீட்டில் ஒரே பிள்ளை, அவனது பெற்றோர்கள் தவமிருந்து பெற்றப் பிள்ளை என்று சொல்லலாம். அவனுக்கு என்று வீட்டில் விளையாட துணை யாரும் இல்லாததால் தேவியுடன் தான் அவனது பொழுதே. ஒன்றாக பள்ளிக்குச் செல்வதும், ஒன்றாக விளையாடச் செல்வதும், வசந்த் அவன் வீட்டிற்குச் செல்வதே உணவு உண்ணவும் உறங்கவும் தான்.

யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை எப்பொழுதும் துள்ளி திரியும் தேவி அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் வெளியே செல்வதை குறைத்துக் கொண்டாள். வசந்த் அவளை பார்க்கும் நேரம் எல்லாம் அவள் படுக்கையில் படுத்துத்தான் இருப்பாள்.

"அம்மா ஏன்மா தேவி இப்படி இருக்கா? என கூட ஒழுங்காவே பேசமாட்டேங்கறா!. எப்பப் போனாலும் தூங்கிக்கிட்டே இருக்கா அம்மா", "என் கூட பள்ளிக்கு வந்து ரொம்பநாள் ஆச்சு அம்மா!" உண்மையான சூழ்நிலையை அறியாமல் அவன் அவனது அம்மாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தான்.

வசந்த்தின் அம்மாவோ பையனுக்கு எப்படி உண்மையை தெரிய வைப்பது என்று திண்டாடினார். "இல்லைடா செல்லம், தேவிக்கு உடம்பு சரியில்லை, காய்ச்சல்; அதான் தேவியால் எங்கேயும் வர முடியலெ. நீ கவலைப் படதே சீக்கிரம் அவள் சரியாகி உன்னோடு விளையாடுவா" என்று சமாளித்தாள்.

வசந்திடம் தேவிக்கு இரத்த புற்று நோய் வந்திருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?அவனுக்கு தான் அந்த சொல்லின் அர்த்தங்கள் புரியுமா?

அவனும் அம்மாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்தவனாய் அங்கிருந்து கிளம்பினான். நேராக சாமி அறைக்கு சென்று கை கூப்பி , கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு முணுமுணுத்தான். அவனது அம்மாவோ என்ன செய்கிறான் என்று அறிந்துக் கொள்ளும் ஆவலில் அவனை நெருங்க நெருங்க உண்மை புரிந்தது. அவரது கண்களும் கலங்க ஆரம்பித்தது. "சாமி, தேவி சீக்கிரம் நல்லா ஆகணும்.. சாமி , தேவி சீக்கிரம் நல்ல ஆகணும்" இந்த வார்த்தைகளைத்தான் அவன் திரும்பத்திரும்ப சொல்லி இறைவனை வேண்டிக் கொண்டிருந்தான். அவனை கட்டி அணைத்துக் கொண்டு அவனது அன்னையும் தேவிக்காக மனமுருகி வேண்டினார்.

சில மாதங்கள் கடந்தும் தேவியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வசந்தும் அவளை அன்றாடம் வீட்டில் வந்து சந்திப்பான். பள்ளியில் என்ன நடந்தது, யார் யார் என்ன செய்தார்கள் என்று அவளிடம் வந்து சொல்வதையே அவனது அன்றாட வேலையாக வைத்திருந்தான்.

ஒரு நாள் அவன் அம்மாதிரி சொல்லிக் கொண்டிருக்கையில் தேவி சட்டென்று சுய நிலையை இழந்தாள். வசந்த் பதறியடித்துக்கொண்டு தேவியின் அம்மாவிடம் சொல்ல, எல்லோரும் அவளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அவளை சுற்றி பெரிய பெரிய இயந்திரங்கள் பூட்டினார்கள். பார்க்கவே சற்று பயமாக இருந்தது. வசந்த் தேவிக்கு என்னவாயிற்று என்று ஒன்றும் புரியாமல் கண்ணாடி கதவிற்கு வெளியே நின்று பயத்துடனும் பதட்டத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரண்டு, மூன்று மருத்துவர்கள் வந்தார்கள். தேவியின் அம்மாவிடம் ஏதோ சொன்னார்கள். தேவியின் அம்மா கதற ஆரம்பித்துவிட்டார். வசந்த்துக்கு அடிவயிற்றில் என்னவோ செய்தது. அவனது அம்மாவை இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டான்.

மருத்துவர்கள் தேவியின் பிஞ்சு உடல் எந்த ஒரு மருத்துவத்தையும் ஏற்க தயாராக இல்லை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று நேரம் குறித்துவிட்டார்கள். அங்குள்ள அனைவரும் அவள் இருந்த அறைக்கு சென்றார்கள். தேவியின் அம்மா தனது மகளின் நிலையை பார்த்து சகிக்க முடியாமல் தனது கணவரின் மேல் மயக்கமாக சாய்ந்துவிட்டார்.

வசந்த், தேவியின் அருகே சென்று கைகளை பிடித்து அழுத்தினான். அவள் கண்களை சற்றுத் திறந்து இலேசாக புன்னகை செய்தாள். அவ்வளவுதான். முணுக் என்ற ஒரு சத்தம் கேட்டது அந்த இயந்திரத்தில் இருந்து. ஒரே பதற்றச் சூழ்நிலை. என்ன நடக்கிறது என்று வசந்தினால் ஓரளவு யூகிக்க முடிந்தது. ஆனால் என்ன பயன் அனைத்தும் முடிந்துவிட்டது. கண்மூடி திறப்பதற்குள் அனைத்தும் முடிந்தாயிற்று. தேவி இவ்வுலகை விட்டுப்போய் விட்டாள். மூன்று தினங்கள் ஆகிவிட்டது.

வசந்த் காய்ச்சலினான் ஒரு வாரம் மிகவும் அவதியுற்றான். தேவி, தேவி என்று முனகினான். எப்பொழுதும் இருக்கும் சுறுசுறுப்பு இப்போதெல்லாம் அவனிடமில்லை. பள்ளிக்கூடம் விட்டு வந்தால் அவன் பாடம் மற்றும் அறை. இப்படிதான் அவனது வாழ்க்கை போய்கொண்டிருந்தது. மிகவும் சுரத்து குறைந்து காணப்பட்டான்.

அவனை பற்றிய கவலையடைந்த அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு புதிய சூழ்நிலையை உருவாக்க வேறு நகரில் குடிப் பெயர்ந்தார்கள். அவர்களுக்கு தெரியாது எங்கு போனாலும் வசந்தின் மனதில் என்று மறையாத சுவடாய் தேவியின் அன்பான முகம் இருக்கும் என்பதும் அவனது இதயபீடத்தில் உற்றத் தோழியாய் என்றென்றும் அவள் அமர்ந்திருப்பாள் என்பதும்.

கைநிறைய சம்பளம்
பெரிய வாகனம்
குளிர்சாதன அலுவலகம்
என பல இருந்தும்
என் கால்கள் நாடியது
இந்த வயல்களை தான்

ஒரு பக்க கதை

ஓடாதே.........

என்னை நீ உன் உடலில் எப்பொழுது செலுத்தினாயோ, அன்றிலிருந்து நீ எனக்கு அடிமை. நான் கொஞ்சம் கொஞ்சமாக உன் உயிரைக் குடிக்கப் போகின்றேன்.
என்னை நீ எப்பொழுது தீண்டினாயோ... அன்று முதல் நான் உன்னை ஆட்கொண்டுவிட்டேன். உன்னை அணு அணுவாக உறிஞ்சி, உனது உடலை சிதைக்கப்போகிறேன்.
உன்னை உன் குடும்பத்தை விட்டு பிரித்து, உனது நண்பர்களிடமிருந்து ஒதுக்கி, நடுத்தெருவிற்கு வரவைக்க போகின்றேன். உன்னை கண்டாலே பிறர் அருவருப்பாக உணர்ந்து ஒதுங்கி போகும் அளவிற்கு உன்னை நான் மாற்ற போகின்றேன். சிறுவர்கள் உன்னை கண்டால் கல்லால் அடித்து துரத்துவதை வேடிக்கை பார்க்க போகிறேன். நீ சாக்கடை, குப்பை தொட்டி போன்றவற்றின் அருகில் தெரு நாயும் வெறுக்கும் வண்ணம் கடும் துர்நாற்றத்துடன் ஈக்கள் மோய்க்க ஒடுங்கி உட்கார்ந்திருக்க போவதை பார்க்கப்போகிறேன்.
நீ என்னிடம் இருந்து எங்கு ஓடினாலும் உன்னை துரத்தி துரத்தி இழுக்கப்போகிறேன் என்று வெறியுடன் சொன்னது போதைப் பொருள்.