03 September 2007


சுதந்திரம்


"அம்மா! அப்பா என்னை நாளையிலிருந்து பள்ளிக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிவிட்டாரே... எனக்கு ஒண்ணுமே புரியலெ. நான் பள்ளிக் கூடம் போகணும் ..நீங்க அப்பாவுக்கு சொல்லுங்களேன்... தயவு செய்து என்னை பள்ளிக்கு அனுப்புங்கம்மா..." அம்மாவிடம் கெஞ்சினாள் ரங்கநாயகி.


"என்னடீ ரங்கு... இப்படி சொல்லுறெ... அப்பா மட்டும் தான் இப்பொழுது பால் மரம் வெட்டறாரு... இப்பொ பொறந்த தம்பியை யாரு பார்த்துப்பா? உன்னோட ஆறு தம்பி தங்கச்சிங்களெ பார்த்துக்கணும்டீ.. அதோட நீயும் எங்க கூட வந்து பால் மரம் வெட்டினால் ஐம்பது வெள்ளி கூட கிடைக்கும். நீயே சொல்லு... ", தனது கணவரின் செயலை நியாயப்படுத்தினாள் அந்த அம்மா... "

ஆமா உங்க நலனுக்காக என்னை பலியாக்கணும் அப்படிதானே?", குமுறி அழுதாள் ரங்கநாயகி.


அந்த வாரம்..தனது பள்ளிக்கூடத்தின் வழியே செல்லுகையில் அவளது ஆசிரியர் சொல்லிக் கொடுத்த ஆத்திச்சூடி நினைவில் வந்து மனதை வருத்தியது. ஒரு மாதம் ஆனது, ஒரு வருடம் ஆனது.. படிக்கவில்லை என்ற உணர்வு இருந்தாலும் குடும்ப சூழ்நிலைதான் மேலோங்கி அதை மழுங்கடிக்க செய்தது.
**********************************************************************

"மெர்டேக்கா..."

"மெர்டேக்கா...."

ஆம். இன்று மலேசியாவின் ஐம்பதாவது சுதந்திர தினம். வண்ண வண்ண ஆடைகள் அணிந்துக் கொண்டு பலர் மலேசிய கொடிகளை ஏந்திவருவது கண் குளிரும் காட்சி.

ரங்கநாயகி மணமுடித்து தற்பொழுது முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. தனது கடந்து வந்த பாதைகளை சற்று நினைவுக்கூர்ந்தாள். எத்தனை எத்தனை முட்கள்?

திருமணமானவுடன் கணவரை பின்பற்றி நகரத்திற்கு வந்தாள். புதிய அனுபவங்கள் பலவற்றை அவள் சந்தித்தாலும், அவளது இலட்சியம் அவளது வருங்கால் சந்ததியினரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவது என்பதே.


அதற்கு அவள் பாடுபட்டது கொஞ்சம் நஞ்சமல்ல. படிப்பறிவு இல்லாதவளுக்கு நகரத்தில் கிடைத்த வேலை வீட்டைச் சுத்தப்படுத்தும் தொழில்தான். அதை நாணயமாக செய்தாள், அவளுடைய கணவனும் அவளது லட்சியத்தை அறிந்து அவளுக்கு துணையாக அயராது உழைத்தார்.


இன்று அவள் சொந்த வீடு கட்டி வசதியாக இருக்கிறாள். ஆனால் அதில் அவளுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியைவிட "உங்கள் பிள்ளைகளா அவர்கள்? என்னாமாய் படிக்கிறார்கள்..! எங்கு வேலைச் செய்கிறார்கள்?", என அனைவரும் கேட்கும் பொழுது, தனக்கே உரிய பாணியில் " அவர்கள் மருத்துவர்கள், அவர்கள் பொறியாளர்கள்" என்று சொல்கையில் பன்மடங்கு மகிழ்ச்சியடைகிறாள்.


மலேசியா சுதந்திரம் அடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இப்பொழுதுதான் அவள் தனது சுதந்திரத்தை உணர்கிறாள்...