04 October 2008


நொண்டிக் கால்தட்டு


தடுமாறி அவள் வந்து நின்றாள். பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. கால் உடைந்து போய் இவ்வளவு தூரம் நடந்து வந்ததை பார்க்கவில்லை நான். அதைப் பார்க்கும் மன தைரியமில்லை. இருந்தாலும் பசிக்காக அவள் வந்திருந்ததை பார்க்க மனம் வாடியது. என்ன செய்ய? வீட்டில் இன்னும் சமைக்கவில்லை.


வீட்டில் ஒருத்தன் இருக்கிறான். மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பிட சமைத்துப் போட்டாலும் அது வேண்டாம் இது வேண்டாம் என அடம் பிடித்து பட்டினியாக இருப்பவன் அவன். அவனுக்கு சமைத்து போடுவதை விட இவளை போன்றவர்களுக்கு சாப்பாடு போடுவது எவ்வள‌வோ மேல்.


என் முகத்தையே எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் என தெரியவில்லை. என்னிடம் எந்த பதிலுமில்லாததால் திரும்பி நடந்தாள். அந்த உடைந்து போன காலுடன் தத்தி தத்தி நடந்தாள். "நில்.. சற்று வருகிறேன்.." என்ன ஆச்சரியம் இதுவரை என்னுடன் பழகாதவள் அவள், என் சொல்லுக்கு கட்டுப்பட்டாள்.


சென்றேன் நேராக, எங்கள் வீட்டில் இருப்பவனுக்காக செய்து வைத்திருந்த சாப்பாடை போட்டேன் ஒரு தட்டில். சாதம் நிறைய போட்டு பிசைந்து போட்டேன். அவள் எனக்காக காத்திருப்பது தெரிந்தது. சாப்பாட்டை இரண்டு பாகமாக பிரித்தேன்.


ஏன் என்று கேட்கிறீர்களா ? அவளை சுற்றியிருந்த‌ அவளது சகாக்களுக்காக தான். இவளுக்கு மட்டும் சாதம் போட்டால் அவளை அவர்கள் உண்டு இல்லை என செய்துவிடுவார்கள். நிறைமாத கர்பிணியான அவளை அவர்கள் விரட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை.


ஒரு பாகத்தை அவளது சகாக்களுக்கு போட்டுவிட்டேன். அவளுக்கு தனியாக ஒரு இடத்தில் போட்டேன். சற்று பயத்துடன் வந்தாள். பசி என நினைக்கிறேன், தட்டை சுத்தம் செய்துவிட்டாள். இவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே அவளது இன்னொரு தோழி இவள் சாப்பாட்டை குறி வைத்துவிட்டாள்.


நானோ அங்கே நின்று அவளது சாப்பாட்டை காத்துக் கொண்டிருந்தேன். அந்த இன்னொருத்தியை மிரட்டினேன். அருகில் வந்தால் அடிதான் விழும் என்றேன். பொருமையாக‌ அவள் சாப்பிட்டாள். அவளுக்காக தண்ணீர் கொடுத்தேன். நொண்டியான அவள் எங்கே செல்வாள் தண்ணீருக்கு. அதையும் பருகி கிளம்பினாள் அந்த இடத்தை விட்டு.


சற்று தொலைவில் சென்ற பிறகு அவள் என்னை திரும்பி "மியாவ்" என நன்றி சொன்னது என் காதில் விழுந்த‌து.


08 August 2008

நிம்மதி...

நிம்மதி எங்கே என தேடும் மனிதா, சற்று நேரம் நில். உன் அருகிலேயே இருக்கின்ற என்னை ஏன் இப்படி கூவி கூவி அழைக்கின்றாய்? கை தொடும் தூரத்தில் இருக்கும் நான் ஏன் உன் கைகளுக்குள் சிக்கவில்லை? அது ஏன்?


உன் அருகில் நான் வரும் பொழுது எல்லாம், நீ என்னை விட்டு விலகினாயே, உனக்கு நினைவில்லையா? நான் உன் வீட்டு வாசலில் வெகு நேரம் நின்றிருந்தேனே அழையா விருந்தாளியாக, அப்பொழுதும் நீ என்னை மதிக்கவில்லையே!. எவ்வளவு நாட்கள் தான் நான் காத்திருக்கமுடியும்? என்னை மதிக்காத வீட்டில் நிற்பதை விட என்னை அழைக்கும் வீட்டில் இருப்பது மேல் என சென்றுவிட்டேன்.

என்னை விட உனக்கு பேரும் புகழும் முக்கியமாக இருந்தது. பணத்தாசை எனும் கொடிய நோய் உன்னை ஆட்டிப் படைத்தது. அதனால் நீ உன் சுய புத்தியினை இழந்தாய். பணம்தான் உன் மகிழ்ச்சி என நீ தேர்ந்தேடுத்தாய். நீ எனது எச்சரிக்கைகளை கேட்கவில்லை. பணப்பேயின் வலையில் நீ சிக்கிக்கொண்டாய். அது உன் கண்ணை மறைத்தது.

உனது பண வெறிக்கு பழியானவர்கள் எத்தனையோ பேர். ஏழையின் வயிற்றில் லஞ்சம் என்றப் பெயரில் எப்படி அடித்தாய்? நினைவு இருக்கிறதா? அன்று தனது மகனுக்கு கல்விக்காக உன்னிடம் கையேந்தி வந்தவரிடம், பணம் இருந்த்தால் பேசு இல்லையேல் வெளியே போ என வாய் கூசாமல் கூறினாயே, நினைவில் இருக்கிறதா? உன்னால் நோயாளிகளின் நாடியைப் பிடிக்க வேண்டிய கைகள் , சுண்டல் விற்றுக் கொண்டிருக்கிறது கடற்கரையோரம்!

பிறருக்கு மட்டுமா நீ தீங்கு செய்தாய்? உனது குடும்பத்தினருடனே நீ பாசமாக இருக்கவில்லையே! ஏன்? உனது ஐந்து வயது குழந்தை அவளது பிறந்த நாளுக்காக பல மணி நேரம் உன்க்காக காத்திருந்து தூங்கியும் போனாளே! நீ அவளிடம் பேசினாயா? பல லட்சம் அவள் பேரில் சேமித்து வைத்திருந்தால் போதாது. தக்க சமயத்தில் பாசம் எனும் உரத்தையும் கொடுக்க வேண்டும். அந்த குழந்தை , இன்னும் உன்னை போல பணத்தாசையில் பிடி படவில்லை மனிதனே!

எத்தனை காலம் தான் நீ இப்படி பட்ட தவறுகளை செய்ய போகிறாய்? இதோ இப்பொழுது நீ காவல் துறையினர் கையில் இருக்கிறாய்.! அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை மனிதனே! சேற்றில் முளைத்த செந்தாமரை போல கடமை கண்ணியம் கட்டுபாடு என மூன்று கோட்பாடுகளை தனது மூச்சாகக் கொண்டு ஒருவன் வந்தான். உனது கள்ள தொழில்களை முடக்கினான். உனக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்தான். இப்பொழுது உன்னை சிறையில் தள்ளியுள்ளான். உனது செல்வாக்கு உன்னை காப்பாற்றவில்லை. மனிதனே நீ இப்பொழுது உனது மரண நாட்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்!


என்னை நீ இப்பொழுது அழைக்கிறாயே? நான் என்ன செய்வது? எனது அருமை நன்கு அறிந்தவர்கள் வெகுசிலரே இன்னும் எஞ்சி உள்ளனர். நான் அவர்களிடமே இருந்துவிடுகிறேன். தயவு செய்து நீ என்னை விட்டுவிடு..

15 July 2008


தொழில்..

"டேய் கண்ணயா.. எங்க போய்ட்ட.. என்னை பார்தது ஓடிட்டயா? எவ்வளோ தைரியம் இருந்தா என்னோட தொழில் செய்யுற‌ இடத்துல நீ தொழில் பண்ணுவ?
ஒழுங்க வா வெளியே..", கால்கள் அவனை அங்குமிங்கும் தள்ளாடிக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொறு முறையும் தனது ஆவேசத்தில் தனது திரு வாயயைத் திறந்தாலே அங்கு கம கம என வாசனை வீசீற்று..

"இல்லை மாமா.. அப்பா வீட்டுல இல்லை..", அவனது சத்ததை தாங்க இயலாமல் ஒரு பையன் அந்த குடிசையிலிருந்து ஓடி வந்து சொன்னான்.

"என்னடா இல்லை.. அடிச்சேனா தெரியும்.. போ போய் உங்க அப்பனை கூப்பிடு..எவ்ளோ தைரியம் இருந்த நான் இருக்கிற இடத்துல‌ வந்து கேட்பான். போ..போ உங்கப்பனை கூப்பிடுறீய இல்லை உன்னை உதைக்கவா!", அந்த சிறுவனை உதைக்க காலைத் தூக்கியவன், அவனது உடலை சமாளிக்க முடியாமல் போதையில் கீழே விழுந்தான்.

அவனை தூக்கலாமா இல்லை வேண்டாமா என பதறிப் போய் நின்றான் அந்த சிறுவன்.

தனது கிழிந்துப் போன பனியனில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டவாரே, " டேய்.. என்னடா.. கிழ விழுந்தும் தூக்காம நிக்குற.. கொழுப்பா உனக்கு.." .அவனை அடிக்க மறுபடியும் கையை ஓங்கினான்.

"அண்ணே.. அவனை அடிக்காதீங்க... நான் தானே தப்பு செஞ்சேன் என்னை அடிங்க அண்ணே.."எங்கிருந்தோ ஓடிவந்தான் ஒருவன்.

"வா டா.. வா அதானே பார்த்தேன் எங்கடா ஆளை காணோம்னு.. எங்க போன? .. இன்னைக்கு ஏன் டா ஏன் இடத்துல வந்து கேட்ட? நம்ம தலைவரு ஆளுக்கு ஒரு இடம்னு பிரிச்சுதானே கொடுத்தாரு.. அப்புறம் ஏன் என்னோட இடத்துக்கு வந்த? "

"இல்லை அண்ணே.. என்னோட இடத்துல என்னமோ பாலம் காட்டுறாங்கலாம் அதனால யாரையும் அங்க தொழில் செய்ய விடல. அவசரத்துல இன்னைக்கு உங்க இடத்துக்கு வந்துட்டேன் . நான் நாளையில இருந்து அங்க தலை வச்சு படுக்க மாட்டேன் , அண்ணே. ", சற்று பயத்துடன் கூறினான் கண்ணையன்.

"அதனே பார்த்தேன், நாளைக்கு மட்டும் உன்னை அங்க பார்த்தேனா..அங்கயே ஒரு கொலை விழும்.." கீழே விழுந்து கிடந்த தனது பிச்சை எடுக்கும் தட்டை எடுத்து தள்ளாடிய படி "தொழில்" செய்யுமிடத்திற்கு சென்றான்..

09 March 2008

மலேசியாவின் தேர்தல் விவரம்...


நேற்று இங்கு நடந்த மலேசியாவின் பன்னிரெண்டாவது தேர்தல் பெரும் திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. இம்மாதிரியான பல பரவலான திருப்பங்களை ஆளும் அரசாங்கம் பல வேளைகளில் எதிர் நோக்கினாலும், இவ்வருடத்தின் தோல்வியை தேசிய முன்னணி இதுவரை கண்டதில்லை.

தேசிய‌ முன்ன‌ணி க‌ட்சிக‌ள்...

இதுவ‌ரை தேசிய‌ முன்ன‌ணியின் வ‌ச‌ம் இருந்த‌ ம‌லேசியர்க‌ள், முத‌ல் முறையாக‌ அவ‌ர்க‌ளின் அதிருப்தியை த‌ங்க‌ளின் வாக்குக‌ளின் மூல‌ம் தெரிய‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள். தேசிய‌ முன்ன‌ணி சில‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணியாக‌ திக‌ழ்ந்து கொண்டிருக்கிறது.

ம‌லாய் இன‌த்திற்கு அம்னோ எனும் மலாய் க‌ட்சியும், சின‌ர்க‌ளுக்கு ம‌.சீ.ச‌ [ ம‌லேசிய‌ சீன‌ர் ச‌ங்க‌ம்] ம‌ற்றும் இந்திய‌ர்க‌ளுக்கு ‌மஇகா [ மலேசிய இந்திய காங்கிரஸ்] என‌ இன்னும் சில‌ சிறிய க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணிதான் தேசிய‌ முன்ன‌ணி.

தேர்த‌லில் போட்டியிடும் இக்கூட்ட‌ணி க‌ட்சிக‌ள் தேசிய‌ முன்ன‌ணியின் சின்ன‌த்தை வைத்துதான் போட்டியிடுவார்க‌ள்.
இப்ப‌டி மூவின‌ ம‌க்க‌ளின் பிர‌திநிதியாக‌ இருக்கும் க‌ட்சிக‌ளை கூட்டாக‌ வைத்து இதுவ‌ரை ம‌லேசியாவை ஆட்சி செய்துக் கொண்டிருந்த‌ தேசிய‌ முன்ன‌ணியின் இவ்வ‌ருட‌ வெற்றி அவ்வ‌ள‌வு திருப்திக‌ர‌மாக‌ இல்லை.

மூன்றில் இர‌ண்டு கிடைக்க‌வில்லை.

தேசிய‌ முன்ன‌ணி அர‌சாங்க‌த்தை உருவாக்குவ‌த‌ற்கான‌ த‌குதிக‌ளை பெற்றிருந்தாலும் நாடளும‌ன்ற‌த்தை மூன்றில் இர‌ண்டு ப‌குதிக‌ளை த‌க்க‌ வைத்துக் கொள்ள‌ இம்முறை த‌வ‌றிவிட்ட‌து. தேர்த‌ல்க‌ள் என்றால் வெறும் சில‌ பொய் வாக்குறுதிக‌ள் ம‌ற்றும் மேடை பேச்சுக‌ள் என‌ அனைவ‌ரும் எண்ணியிருந்த‌ வேளையில், ம‌க்க‌ள தங்கள் உள்ள‌க் குமு‌ற‌ல்க‌ளையும் அவ‌ர்க‌ள் செவி சாய்க்க‌ வேண்டும் என‌ த‌ங்க‌ளின் ஓட்டுக‌ளின் மூல‌ம் தெரிய‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள் என‌லாம்.
219 இருக்கைக‌ளில் தேசிய‌ முன்ன‌ணி இதுவ‌ரை 137 இட‌ங்களைக் கைப்ப‌ற்றி அர‌சாங்க‌த்தை உருவாக்குவ‌த‌ற்கான‌ த‌குதியை பெற்றுள்ள‌து. எதிர் க‌ட்சியின‌ர் இதுவ‌ரை 82 இடங்களை கைப்ப‌ற்றி தே.மு மூன்றில் இர‌ண்டு நாடாளும‌ன‌றத்தை ஆட்சி செய்யாம‌ல் த‌டுத்திருக்கிறார்க‌ள்.
அமைச்ச‌ர்க‌ளின் தோல்விக‌ள்

இத்தேர்த‌லில் மூன்று அமைச்ச‌ர்க‌ளும் ஐந்து துணை அமைச்ச‌ர்க‌ளும் தோல்வியை த‌ழுவினார்க‌ள். கெர‌க்கான் க‌ட்சி த‌லைவ‌ர் [ டான்ஸ்ரீ கோ] , பிபிபி க‌ட்சியின் த‌லைவ‌ர், ட‌த்தோ கேவிய‌ஸ் ம‌ற்றும் ம‌.இ.கா வின் த‌லைவ‌ர் ட‌த்தோஸ்ரீ சாமிவேலு என‌ தேசிய‌ முன்ன‌ணியின் கூட்ட‌னி க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் எதிர்பாராத‌ தோல்வியை க‌ண்டிருக்கிறார்க‌ள்.
மஇகாவின் மூன்று நாடாளூம‌ன்ற‌ வேட்பாளர்க‌ளும் ஏழு ச‌ட்ட‌ம‌ன்ற‌ வேட்பாள‌ர்க‌ளும் ம‌ட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்க‌ள்.இதுவ‌ரை 100 ச‌த‌விகித‌ வெற்றியை ம‌ட்டுமே மஇகா க‌ண்டிருந்த‌து.
ஐந்து மாநிலங்கள் எதிர்கட்சியினர் கையில்

பினாங்கு, சிலாங்கூர்,கெடா,ம‌ற்றும் பெர்லீஸ் மாநில‌ங்க‌ள் முத‌ல் முறையாக‌ எதிர் க‌ட்சி கூட்ட‌ணிக்கு மாறிய‌து. எப்பொழுதும் போல‌ கிள‌ந்தான் மாநில‌த்தை பாஸ் [PAS] த‌க்க‌ வைத்துக்கொண்ட‌து.
தே.மு ப‌ல‌மாக‌ எண்ணியிருந்த‌ சிலாங்கூர் மாநில‌ம் இன்று எதிர்க‌ட்சி கூட்ட‌ணியில் இருப்ப‌து அதிர்ச்சியான‌ செய்தி என‌ கூறியிருக்கிறார் ட‌த்தோஸ்ரீ அப்துல்ல‌ ப‌டாவி.

ம‌க்க‌ள் ச‌க்தி / ஹீண்றாப்

இந்திய‌ர்க‌ளின் நிலையைக் குறித்து ந‌டைபெற்ற‌ அமைதி ஊர்வ‌ல‌த்தின் தாக்க‌ம் இந்த‌ தேர்த‌லின் முடிவுக‌ளில் தெரிகிற‌து. ஹீண்றாப் த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் மனோக‌ர‌ன் வெற்றிப் பெற்றுள்ளார். அவ‌ர் இன்னும் உள்நாட்டு பாதுகாப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் சிறையில் த‌டுத்து வைத்துள்ளார் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

18 February 2008


நம் காதல்

நான் உனக்கு மனைவியாக
நம் குழந்தைகளின் தாயாக‌
அவர்களின் குறும்புகளுக்கிடையில்
ஒரு பிஞ்சு மழலையாக

இப்படி துன்பமற்ற வாழ்க்கைக்காக‌
நெஞ்சம் முழுக்க பட்டாம்பூச்சியாகக்

காத்திருக்கையில்
விழுந்தது மனதில் ஒரு பாரம்
உனது பிரிவின் செய்தி

நெடிப் பொழுதில் எ(ன்)னை மறந்தேன்
பைத்தியமாகத் திரிந்தேன்
இதுவா நமது காதல்?
என்றும் மன உறுதியுடன்
முகத்தில் புன்னகை கொழிக்க‌
எதையும் எதிர்க்கும் சக்தியுடன்
இருக்கும் நீ
இன்று என்னுள்
ஒரு சுவாசமாக

இரத்த நாளத்தில் ஓடும்

உயிராக
எனது வாழ்க்கையில் இருக்கையில்
உன்னை மறக்காமல்
உன் வாழ்க்கை நெறிகளை
பின்பற்ற உறுதுணையாக
இருப்பது நம் காதல்

06 February 2008


காதல் மயக்கம்..

காதல் செஞ்சுபுட்டேனே அம்மா..
அந்த மயக்கத்துல உன்னை மறந்தேனே அம்மா..

எனக்கு ஒரு நல்ல மனைவிய‌ தேடினேனே அம்மா
ஆனா உன‌க்கு ஒரு ம‌க‌ளை தேட‌லேயே அம்மா..

என் ப‌டிப்புக்கு ஒரு அழ‌கிய‌ தேடினேனே அம்மா..
ஆனா அவ‌ள் ப‌ண்பை நான் பார்க்க‌லேயே அம்மா..

வீட்டுக்கு விள‌க்கு ஏத்த கூட்டி வ‌ந்தேனே அம்மா..
உன்னை வீட்டை விட்டு துர‌த்திட்டாளே அம்மா...

ப‌த்து மாச‌ம் என்னை சும‌ந்தாயே அம்மா..
உன்னை விட‌ அவ‌ளை ந‌ம்பிட்டேனே அம்மா...

ஆற‌ரிவு க‌ட‌வுள் கொடுத்தாரே அம்மா..
அதை க‌ல்யாண‌ம் ஆன பிற‌கு தொலைச்சிப்புட்டேனே அம்மா..


காலம் இன்னும் மாறவில்லை...

குப்பைகளின் நறுமணம் எங்களை வரவேற்றது...
பள்ள‌மும் குழிகளும் நிறைந்த அந்த சாலைகள்...
வெட்டிப் பேச்சுக்காக சூழ்ந்திருக்கும் இளவட்டங்கள்..
சாலையின் ஓரத்தில் கிடந்த காலி போத்தல்கள் ..
இன்று விடுமுறை என நினைவுறுத்தியன‌..
சார் சம்சு ஒன்னு வேணும்..
என கேற்கும் ஒரு சிறுவன்....
அவனை பின் தொடர்ந்து வந்த தள்ளாடிய‌ கால்கள்...
காலம் இன்னும் மாறவில்லை....


*விசாலம் அம்மாவின் ஒன்னும் மாறவில்லை படித்தால் வந்த வரிகள் இவை...
எனது பழைய வசிப்பிடத்தை நினைவூட்டும் வகையில்...