08 August 2008

நிம்மதி...

நிம்மதி எங்கே என தேடும் மனிதா, சற்று நேரம் நில். உன் அருகிலேயே இருக்கின்ற என்னை ஏன் இப்படி கூவி கூவி அழைக்கின்றாய்? கை தொடும் தூரத்தில் இருக்கும் நான் ஏன் உன் கைகளுக்குள் சிக்கவில்லை? அது ஏன்?


உன் அருகில் நான் வரும் பொழுது எல்லாம், நீ என்னை விட்டு விலகினாயே, உனக்கு நினைவில்லையா? நான் உன் வீட்டு வாசலில் வெகு நேரம் நின்றிருந்தேனே அழையா விருந்தாளியாக, அப்பொழுதும் நீ என்னை மதிக்கவில்லையே!. எவ்வளவு நாட்கள் தான் நான் காத்திருக்கமுடியும்? என்னை மதிக்காத வீட்டில் நிற்பதை விட என்னை அழைக்கும் வீட்டில் இருப்பது மேல் என சென்றுவிட்டேன்.

என்னை விட உனக்கு பேரும் புகழும் முக்கியமாக இருந்தது. பணத்தாசை எனும் கொடிய நோய் உன்னை ஆட்டிப் படைத்தது. அதனால் நீ உன் சுய புத்தியினை இழந்தாய். பணம்தான் உன் மகிழ்ச்சி என நீ தேர்ந்தேடுத்தாய். நீ எனது எச்சரிக்கைகளை கேட்கவில்லை. பணப்பேயின் வலையில் நீ சிக்கிக்கொண்டாய். அது உன் கண்ணை மறைத்தது.

உனது பண வெறிக்கு பழியானவர்கள் எத்தனையோ பேர். ஏழையின் வயிற்றில் லஞ்சம் என்றப் பெயரில் எப்படி அடித்தாய்? நினைவு இருக்கிறதா? அன்று தனது மகனுக்கு கல்விக்காக உன்னிடம் கையேந்தி வந்தவரிடம், பணம் இருந்த்தால் பேசு இல்லையேல் வெளியே போ என வாய் கூசாமல் கூறினாயே, நினைவில் இருக்கிறதா? உன்னால் நோயாளிகளின் நாடியைப் பிடிக்க வேண்டிய கைகள் , சுண்டல் விற்றுக் கொண்டிருக்கிறது கடற்கரையோரம்!

பிறருக்கு மட்டுமா நீ தீங்கு செய்தாய்? உனது குடும்பத்தினருடனே நீ பாசமாக இருக்கவில்லையே! ஏன்? உனது ஐந்து வயது குழந்தை அவளது பிறந்த நாளுக்காக பல மணி நேரம் உன்க்காக காத்திருந்து தூங்கியும் போனாளே! நீ அவளிடம் பேசினாயா? பல லட்சம் அவள் பேரில் சேமித்து வைத்திருந்தால் போதாது. தக்க சமயத்தில் பாசம் எனும் உரத்தையும் கொடுக்க வேண்டும். அந்த குழந்தை , இன்னும் உன்னை போல பணத்தாசையில் பிடி படவில்லை மனிதனே!

எத்தனை காலம் தான் நீ இப்படி பட்ட தவறுகளை செய்ய போகிறாய்? இதோ இப்பொழுது நீ காவல் துறையினர் கையில் இருக்கிறாய்.! அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை மனிதனே! சேற்றில் முளைத்த செந்தாமரை போல கடமை கண்ணியம் கட்டுபாடு என மூன்று கோட்பாடுகளை தனது மூச்சாகக் கொண்டு ஒருவன் வந்தான். உனது கள்ள தொழில்களை முடக்கினான். உனக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்தான். இப்பொழுது உன்னை சிறையில் தள்ளியுள்ளான். உனது செல்வாக்கு உன்னை காப்பாற்றவில்லை. மனிதனே நீ இப்பொழுது உனது மரண நாட்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்!


என்னை நீ இப்பொழுது அழைக்கிறாயே? நான் என்ன செய்வது? எனது அருமை நன்கு அறிந்தவர்கள் வெகுசிலரே இன்னும் எஞ்சி உள்ளனர். நான் அவர்களிடமே இருந்துவிடுகிறேன். தயவு செய்து நீ என்னை விட்டுவிடு..