04 October 2008


நொண்டிக் கால்தட்டு


தடுமாறி அவள் வந்து நின்றாள். பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. கால் உடைந்து போய் இவ்வளவு தூரம் நடந்து வந்ததை பார்க்கவில்லை நான். அதைப் பார்க்கும் மன தைரியமில்லை. இருந்தாலும் பசிக்காக அவள் வந்திருந்ததை பார்க்க மனம் வாடியது. என்ன செய்ய? வீட்டில் இன்னும் சமைக்கவில்லை.


வீட்டில் ஒருத்தன் இருக்கிறான். மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பிட சமைத்துப் போட்டாலும் அது வேண்டாம் இது வேண்டாம் என அடம் பிடித்து பட்டினியாக இருப்பவன் அவன். அவனுக்கு சமைத்து போடுவதை விட இவளை போன்றவர்களுக்கு சாப்பாடு போடுவது எவ்வள‌வோ மேல்.


என் முகத்தையே எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் என தெரியவில்லை. என்னிடம் எந்த பதிலுமில்லாததால் திரும்பி நடந்தாள். அந்த உடைந்து போன காலுடன் தத்தி தத்தி நடந்தாள். "நில்.. சற்று வருகிறேன்.." என்ன ஆச்சரியம் இதுவரை என்னுடன் பழகாதவள் அவள், என் சொல்லுக்கு கட்டுப்பட்டாள்.


சென்றேன் நேராக, எங்கள் வீட்டில் இருப்பவனுக்காக செய்து வைத்திருந்த சாப்பாடை போட்டேன் ஒரு தட்டில். சாதம் நிறைய போட்டு பிசைந்து போட்டேன். அவள் எனக்காக காத்திருப்பது தெரிந்தது. சாப்பாட்டை இரண்டு பாகமாக பிரித்தேன்.


ஏன் என்று கேட்கிறீர்களா ? அவளை சுற்றியிருந்த‌ அவளது சகாக்களுக்காக தான். இவளுக்கு மட்டும் சாதம் போட்டால் அவளை அவர்கள் உண்டு இல்லை என செய்துவிடுவார்கள். நிறைமாத கர்பிணியான அவளை அவர்கள் விரட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை.


ஒரு பாகத்தை அவளது சகாக்களுக்கு போட்டுவிட்டேன். அவளுக்கு தனியாக ஒரு இடத்தில் போட்டேன். சற்று பயத்துடன் வந்தாள். பசி என நினைக்கிறேன், தட்டை சுத்தம் செய்துவிட்டாள். இவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே அவளது இன்னொரு தோழி இவள் சாப்பாட்டை குறி வைத்துவிட்டாள்.


நானோ அங்கே நின்று அவளது சாப்பாட்டை காத்துக் கொண்டிருந்தேன். அந்த இன்னொருத்தியை மிரட்டினேன். அருகில் வந்தால் அடிதான் விழும் என்றேன். பொருமையாக‌ அவள் சாப்பிட்டாள். அவளுக்காக தண்ணீர் கொடுத்தேன். நொண்டியான அவள் எங்கே செல்வாள் தண்ணீருக்கு. அதையும் பருகி கிளம்பினாள் அந்த இடத்தை விட்டு.


சற்று தொலைவில் சென்ற பிறகு அவள் என்னை திரும்பி "மியாவ்" என நன்றி சொன்னது என் காதில் விழுந்த‌து.