20 June 2011


இது எப்படி இருக்கு....


நேற்று தந்தையர் தினம். சற்று மனம் கனத்துடன் இருந்தேன். சென்ற ஆண்டு இதே நேரம், அப்பாவுடன் விருந்து அவருடன் சாப்பிங் என குதுகலமாக இருந்தோம்.
இப்பொழுது.......
இன்று இருப்பார் நாளை இல்லை என அடிக்கடி கூறுபவர், அவர் கூற்றை எங்களுக்கு உணர்த்தி சென்றிருக்கிறார்.


இன்று தி.எச்.ஆர் ராக வில், இது எப்படி இருக்கு தந்தையர் தின சிறப்பு என ஒரு மகள் தன் ததையை ஏமாற்றுவதை போல நடித்திருப்பா.
அவர் வலி தெரியாம எங்கோவோ மாட்டிக் கொண்டிருப்பதாகவும், என்ன செய்வது என தெரியாமல் இருப்பதாகவும் அழுதுக் கொண்டே தன் தந்தையை ஏமாற்ற வேண்டும்.

ஒரு நிமிடம் தான் நான் இந்நிகழ்ச்சியைக் கேட்டேன். அத் தந்தையின் பதற்றம் கவலை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என் அப்பாவக இருந்திருந்தால் அவருக்கு நான் கொடுக்கும் மன அழுத்தமே அவரது உடல் நிலையை இன்னும் மோசமடைய செய்திர்க்கு.

இது எப்படி இருக்கு... மோசம்...

19 September 2010

அப்பா.....

நீங்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஆறுதல் தருவதாக சொல்லி பல மன சுமைகளை ஏற்றுகிறார்கள். நீங்கள் எங்கள் இடத்தில் இருந்திருந்தால் இவையாவும் நிகழ்ந்திருக்காது.

எங்களுக்கு ஆலமரமாய் இருந்தீர்களே அப்பா...
நிழல் கிடைக்காமல் நாங்கள் தவிக்கிறோமே அப்பா..
பலர் எங்கள் நன்மைக்காக பல சுமைகளை ஏற்றுகிறார்களே அப்பா...
என் வாழ்வில் கறுப்பு ஜீலையாக இந்த வருடம் எங்களை மூழ்கடிததே அப்பா...
இனிமேல் எப்பொழுது உங்களை நாங்கள் காண முடியும்..


கண்ணீருடன்

பரமேஸ்வரி நேமிலி...

10 September 2010

நல்ல பல்பு....

தீடீர் என குளியல் அறையில் உள்ள விளக்கு எறியவில்லை.. அம்மாவும் மன கவலையுடன் யார் இதை இப்பொழுது மாற்றுவார்கள் .. என அப்பாவின் சிந்தைனையில் மூழ்கிவிட்டார்..

அப்பாவுடன் பல சமயங்களில் அவர் மின்சார வேளைகளை செய்யும் பொழுது உதவியாளராக இருந்தது என் மனம் கலங்கியது.

ஏணியை எடுத்து விளக்கை கலட்டிய பிறகு , அதை இனிமேல் பயன்படுத்த முடியாது என தெரிந்தது.

அப்பாவின் மின்சார பொருட்கள் இருக்கும் அறையை ஒரு அலசல் அலசலில், அவர் கைப்பட எழுதிய நல்ல பல்பு எனும் ஒரு பல்ப் என் கையில் சிக்கியது.
இப்படி ஒரு சூழ்நிலையில் நாங்கள் தடுமாற கூடாது என முன்பே எழுதிவைத்துள்ளார் போலும்..


என்றும் அவர் நினைவில் இருக்கும்,
பரமேஸ்வரி நேமிலி..

23 August 2010


மறுபடியும்....




மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத்துகளை நாடி வந்திருக்கிறேன். ஒரு நான்கு வருடங்களுக்கு முன் மன அமைதிக்காக எழுததுவங்கியவள் மறுபடியும் அதே மன அமைதியை நாடி எழுதுகிறேன்.

கண்ணீர் இல்லாமல் அனை(த்து)வருக்கும் மிகவும் அமைதியாக பதில் அளிப்பவளுக்கு உணர்வுகள் இல்லையா?
கடவுளே.. ஏன் இந்த சோதனை?

கடவுளின் ஆசீகள் எப்பொழுதும் என்னிடம் இருக்கிறது என பெருமை பட்டேனே.. ஆனால் இந்த மகிழ்வு மிக குறுகிய காலத்திலேயே சோகத்தை கொடுக்கிறதே....
கால இயந்திரம் என்னுடன் இருந்தால்.....


ஸ்ரீ ராம ஜெயம்

14 November 2009

திருடன்

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி]

தங்களது பரம்பரை தொழிலை எவ்வளவு தான் விடனும்னு நினைத்தாலும் அவர்களால் விட முடியவில்லை..
தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் அதனை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார்கள்..

சுப்பன்


எவ்வளவு பெரிய வீடா இருந்தாலும் உள் புகுந்து தனக்கு தேவையானவற்றை திருடிக் கொள்வான். அவனது திறமையைக் கண்டு அவனது நண்பர்கள் கூட்டம் அவனை தங்களது குழு தலைவராக நியமித்திருந்தார்கள். எவ்வளது கடினமான பாதுகாப்புகள் இருந்தாலும் அனைத்தையும் கண் கழுவி விட்டு தனது கைவரிசையை காட்டிவிடுவான். குப்பனை தவிர‌ வேறு யாரையும் நம்பாதவன்.



குப்பன்


சுப்பனின் அப்பாவின் உயிரை காப்பாற்ற லோரியில் தனது உயிரைவிட்டவரின் மகன். அதனால் குப்பனிடம் தனி அன்பு மிக்கவன் சுப்பன். சுப்பன் அள‌விற்கு ஒரு துளிக் கூட இவனிடம் தைரியமில்லை. சுப்பனிடம் உதவி வேண்டும் என்றால் அனைவரும் குப்பனை தான் நாடுவார்கள். குப்பனின் அப்பாவின் உயிர் தியாகத்தால் இன்று வரை சுப்பன் இவனை விட்டு பிரிந்த்து இல்லை.

வெகு நாட்களாக அந்த பச்சை கலர் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை திருட வேண்டும் என திட்டமிட்டுக் கொண்டிருந்தான் சுப்பன். ஆனால் அந்த வீட்டின் தனிமையில் இருக்கும் கிழவர் இதனை அறிந்துக் கொண்டு அவர்களை வீட்டின் அருகில் நெருங்க முடியாமல் இரண்டு நாய்களை வளர்த்துக் கொண்டிருந்தார்.



இரண்டு நாட்களாக அந்த வீட்டில் ஒரு நாய் மட்டுமே காவலுக்கு இருக்கிறது. சுப்பன் தனது நண்பர்களிடம் விசாரித்ததில் அந்த நாய்க்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக தெரிய வந்தது.கிழவரும் அங்கும் மிங்கும் அலைந்துக் கொண்டிப்பதை நோட்டமிட்டான் சுப்பன். இது தான் சுப்பனுக்கு சரியான தருணம். இதை விட்டால் அந்த வீட்டில் திருடுவது மிகவும் கடினம் என உணர்ந்தான்.



குப்பனை துணைக்கு அழைத்தான். அவனிடம் தனது திட்டங்களை கூறினான். குப்பனோ.. அந்த நாயிடம் நெருங்கவே பயந்தான்.


"டேய் குப்பா , உன்னால முடியலன என் வேலையை நீ செய் சரியா?" எரிச்சலுடன் கூறினான்.



"இல்லைடா.. அதுல நான் மாட்டிகிட்டா என் உயிரு போயிடும்.. நானே அந்த நாயை திசை திருப்பிரேன்" பயத்துடன் உதறினான் குப்பன்.

சுப்பன் நினைத்தது போல மாலை ஒன்றுக்கு அந்த கிழவன் வீட்டை விட்டு கிளம்பினான்..இன்னும் முப்பது நிமிடம் தான் இருக்கிறது அவர்களின் திட்டத்தை நிறைவேற்ற.



குப்பன் நேராக அந்த வீட்டின் கேட்டின் மேல் ஏறி, அந்த நாயைப்பார்த்து கேலி செய்துக் கொண்டிருந்தான். அந்த நாயோ அவனை பிய்த்து எறியாத குறைதான்.. அந்த நாயின் முழு கவனமும் குப்பன் மேலிருக்க.சுப்பன் நைசாக வீட்டின் ஜன்னலின் வழியாக உள் சென்று , இவ்வளவு நாளும் அவர்கள் கங்கனம் கட்டி கொண்டிருந்த அந்த சிறிய சுருக்குபையை தனது வாயால் கவ்விக் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றான்.



தாங்கள் இருக்கும் புதருக்குள் குளிர் காலங்களில் போர்த்திக் கொள்ள அந்த சுருக்குப் பையை இவ்வளவு காலமாக குறிவைத்திருந்தான் சுப்பன் எனும் மைனா.. :)

12 November 2009

உண்மையானால்....


பரபரப்பாக அனைவரும் தங்கள் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.காலையில் இருக்கும் உற்சாகத்தை விட அனைவரது முகத்திலும் ஒரு சிறு மகிழ்ச்சி தென்பட்டது. நாளை சனிக்கிழமை இனி இரு நாட்களுக்கு இந்த பரபரப்பான வாழ்க்கை இருக்காது.தங்களின் தனிபட்ட வாழ்க்கைக்கு இனி இருநாட்களும் அடிமை..


அவளும் தனது வேகமான நடையுடன் , தனது நாளைய அட்டவணையை மனதில் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.இன்னும் சில நிமிடத்தில் அவள் ஏற வேண்டிய இரயில் வந்துவிடும். அவள் அதனை விட்டுவிட்டால் இன்னும் ஐந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.ஐந்து நிமிடங்கள் மிக குறுகிய நேரமாக இருந்தாலும் , இந்த அவசர உலகத்தில் இந்த ஐந்து நிமிடங்கள் தாமதத்தினால் அவள் ஒரு மணிநேரம் வரை பேருந்திற்கு நிற்க நேரிடும்.
"சிஸ்டர்" என ஒரு பெண்மணியின் குரல் அவளது நடையின் வேகத்தை குறைக்க செய்தது."நான் ______ வரேன் . என் புருஷனுக்கும் மூனு மாசமா வேலை இல்லை.." தனது சொற்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.இவங்க‌ ஏன் இதை எல்லாம் என் கிட்ட சொல்லுறாங்க... தனது மனதிற்குள் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன..


"இன்னைக்கு நான் மிந்தி வேலை பார்த்த முதலாளி , என்னோட சம்பள பாக்கியை தரேனு சொன்னார். அதனால இங்க பஸ் எடுத்து வந்துட்டேன். கடைசி நிமிஷத்துல வரல அவர். திரும்பி போக என் கிட்ட காசு இல்லை. நேற்றுல இருந்து இன்னும் நாங்க சாப்பிடல.. பையனும் தான்.." தனது மூன்று வயது நிரம்பிய பையனை அவளிடம் காட்டினார் .


"ம்ம்ம்.. சாப்பாடு வாங்கி கொடுக்கலாமா? ஆனால் நேரமில்லையே.. நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் இரயில் நிலையம் செல்லாவிட்டால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமே.. என்ன செய்யலாம்?" .... தனது மூளையை கசக்கிக் கொண்டிருந்தாள்.
நம்பலாமா? ஒரு வேளை பொய் உரைத்திருந்தால்?

....


"என்னால் முடிந்தது. " எனறு தனது கைப்பையிலிருந்து ஒரு பத்து ரிங்கிட்டை எடுத்துக்கொடுத்தாள்.


"நீங்கள் கூறியது உண்மை என நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் பணம் தருகிறேன். முதலில் பையனுக்கு எதாவது வாங்கிக்கொடுங்கள்..."
"இல்லைங்க சிஸ்டர் . என் பையன் மேல சத்தியமா...." அவர் சொல்லி முடிப்பதற்குள்...


"வேண்டாங்க.. சத்தியம் எல்லாம் வேண்டாம்..." தனது நடையை துவங்கினாள், அந்த பெண்மணியின் நன்றி அவளின் காதில் விழவில்லை..


மனது மறுப‌டியும் ஐயம் கவ்விக் கொண்டது.. அவர் பொய் சொல்லியிருந்தால்?அதனால் என்ன? ... அவர் கூறியது உண்மையாயிருந்தால் அந்த சிறு பையன் பட்டினியால் இருப்பானே...மனதை தேற்றிக் கொண்டாள்

10 September 2009

Daisypath Wedding tickers

இன்னும் எத்தனை நாள் இருக்கிறது ????