Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

04 October 2008


நொண்டிக் கால்தட்டு


தடுமாறி அவள் வந்து நின்றாள். பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. கால் உடைந்து போய் இவ்வளவு தூரம் நடந்து வந்ததை பார்க்கவில்லை நான். அதைப் பார்க்கும் மன தைரியமில்லை. இருந்தாலும் பசிக்காக அவள் வந்திருந்ததை பார்க்க மனம் வாடியது. என்ன செய்ய? வீட்டில் இன்னும் சமைக்கவில்லை.


வீட்டில் ஒருத்தன் இருக்கிறான். மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பிட சமைத்துப் போட்டாலும் அது வேண்டாம் இது வேண்டாம் என அடம் பிடித்து பட்டினியாக இருப்பவன் அவன். அவனுக்கு சமைத்து போடுவதை விட இவளை போன்றவர்களுக்கு சாப்பாடு போடுவது எவ்வள‌வோ மேல்.


என் முகத்தையே எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் என தெரியவில்லை. என்னிடம் எந்த பதிலுமில்லாததால் திரும்பி நடந்தாள். அந்த உடைந்து போன காலுடன் தத்தி தத்தி நடந்தாள். "நில்.. சற்று வருகிறேன்.." என்ன ஆச்சரியம் இதுவரை என்னுடன் பழகாதவள் அவள், என் சொல்லுக்கு கட்டுப்பட்டாள்.


சென்றேன் நேராக, எங்கள் வீட்டில் இருப்பவனுக்காக செய்து வைத்திருந்த சாப்பாடை போட்டேன் ஒரு தட்டில். சாதம் நிறைய போட்டு பிசைந்து போட்டேன். அவள் எனக்காக காத்திருப்பது தெரிந்தது. சாப்பாட்டை இரண்டு பாகமாக பிரித்தேன்.


ஏன் என்று கேட்கிறீர்களா ? அவளை சுற்றியிருந்த‌ அவளது சகாக்களுக்காக தான். இவளுக்கு மட்டும் சாதம் போட்டால் அவளை அவர்கள் உண்டு இல்லை என செய்துவிடுவார்கள். நிறைமாத கர்பிணியான அவளை அவர்கள் விரட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை.


ஒரு பாகத்தை அவளது சகாக்களுக்கு போட்டுவிட்டேன். அவளுக்கு தனியாக ஒரு இடத்தில் போட்டேன். சற்று பயத்துடன் வந்தாள். பசி என நினைக்கிறேன், தட்டை சுத்தம் செய்துவிட்டாள். இவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே அவளது இன்னொரு தோழி இவள் சாப்பாட்டை குறி வைத்துவிட்டாள்.


நானோ அங்கே நின்று அவளது சாப்பாட்டை காத்துக் கொண்டிருந்தேன். அந்த இன்னொருத்தியை மிரட்டினேன். அருகில் வந்தால் அடிதான் விழும் என்றேன். பொருமையாக‌ அவள் சாப்பிட்டாள். அவளுக்காக தண்ணீர் கொடுத்தேன். நொண்டியான அவள் எங்கே செல்வாள் தண்ணீருக்கு. அதையும் பருகி கிளம்பினாள் அந்த இடத்தை விட்டு.


சற்று தொலைவில் சென்ற பிறகு அவள் என்னை திரும்பி "மியாவ்" என நன்றி சொன்னது என் காதில் விழுந்த‌து.


15 July 2008


தொழில்..

"டேய் கண்ணயா.. எங்க போய்ட்ட.. என்னை பார்தது ஓடிட்டயா? எவ்வளோ தைரியம் இருந்தா என்னோட தொழில் செய்யுற‌ இடத்துல நீ தொழில் பண்ணுவ?
ஒழுங்க வா வெளியே..", கால்கள் அவனை அங்குமிங்கும் தள்ளாடிக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொறு முறையும் தனது ஆவேசத்தில் தனது திரு வாயயைத் திறந்தாலே அங்கு கம கம என வாசனை வீசீற்று..

"இல்லை மாமா.. அப்பா வீட்டுல இல்லை..", அவனது சத்ததை தாங்க இயலாமல் ஒரு பையன் அந்த குடிசையிலிருந்து ஓடி வந்து சொன்னான்.

"என்னடா இல்லை.. அடிச்சேனா தெரியும்.. போ போய் உங்க அப்பனை கூப்பிடு..எவ்ளோ தைரியம் இருந்த நான் இருக்கிற இடத்துல‌ வந்து கேட்பான். போ..போ உங்கப்பனை கூப்பிடுறீய இல்லை உன்னை உதைக்கவா!", அந்த சிறுவனை உதைக்க காலைத் தூக்கியவன், அவனது உடலை சமாளிக்க முடியாமல் போதையில் கீழே விழுந்தான்.

அவனை தூக்கலாமா இல்லை வேண்டாமா என பதறிப் போய் நின்றான் அந்த சிறுவன்.

தனது கிழிந்துப் போன பனியனில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டவாரே, " டேய்.. என்னடா.. கிழ விழுந்தும் தூக்காம நிக்குற.. கொழுப்பா உனக்கு.." .அவனை அடிக்க மறுபடியும் கையை ஓங்கினான்.

"அண்ணே.. அவனை அடிக்காதீங்க... நான் தானே தப்பு செஞ்சேன் என்னை அடிங்க அண்ணே.."எங்கிருந்தோ ஓடிவந்தான் ஒருவன்.

"வா டா.. வா அதானே பார்த்தேன் எங்கடா ஆளை காணோம்னு.. எங்க போன? .. இன்னைக்கு ஏன் டா ஏன் இடத்துல வந்து கேட்ட? நம்ம தலைவரு ஆளுக்கு ஒரு இடம்னு பிரிச்சுதானே கொடுத்தாரு.. அப்புறம் ஏன் என்னோட இடத்துக்கு வந்த? "

"இல்லை அண்ணே.. என்னோட இடத்துல என்னமோ பாலம் காட்டுறாங்கலாம் அதனால யாரையும் அங்க தொழில் செய்ய விடல. அவசரத்துல இன்னைக்கு உங்க இடத்துக்கு வந்துட்டேன் . நான் நாளையில இருந்து அங்க தலை வச்சு படுக்க மாட்டேன் , அண்ணே. ", சற்று பயத்துடன் கூறினான் கண்ணையன்.

"அதனே பார்த்தேன், நாளைக்கு மட்டும் உன்னை அங்க பார்த்தேனா..அங்கயே ஒரு கொலை விழும்.." கீழே விழுந்து கிடந்த தனது பிச்சை எடுக்கும் தட்டை எடுத்து தள்ளாடிய படி "தொழில்" செய்யுமிடத்திற்கு சென்றான்..

03 September 2007


சுதந்திரம்


"அம்மா! அப்பா என்னை நாளையிலிருந்து பள்ளிக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிவிட்டாரே... எனக்கு ஒண்ணுமே புரியலெ. நான் பள்ளிக் கூடம் போகணும் ..நீங்க அப்பாவுக்கு சொல்லுங்களேன்... தயவு செய்து என்னை பள்ளிக்கு அனுப்புங்கம்மா..." அம்மாவிடம் கெஞ்சினாள் ரங்கநாயகி.


"என்னடீ ரங்கு... இப்படி சொல்லுறெ... அப்பா மட்டும் தான் இப்பொழுது பால் மரம் வெட்டறாரு... இப்பொ பொறந்த தம்பியை யாரு பார்த்துப்பா? உன்னோட ஆறு தம்பி தங்கச்சிங்களெ பார்த்துக்கணும்டீ.. அதோட நீயும் எங்க கூட வந்து பால் மரம் வெட்டினால் ஐம்பது வெள்ளி கூட கிடைக்கும். நீயே சொல்லு... ", தனது கணவரின் செயலை நியாயப்படுத்தினாள் அந்த அம்மா... "

ஆமா உங்க நலனுக்காக என்னை பலியாக்கணும் அப்படிதானே?", குமுறி அழுதாள் ரங்கநாயகி.


அந்த வாரம்..தனது பள்ளிக்கூடத்தின் வழியே செல்லுகையில் அவளது ஆசிரியர் சொல்லிக் கொடுத்த ஆத்திச்சூடி நினைவில் வந்து மனதை வருத்தியது. ஒரு மாதம் ஆனது, ஒரு வருடம் ஆனது.. படிக்கவில்லை என்ற உணர்வு இருந்தாலும் குடும்ப சூழ்நிலைதான் மேலோங்கி அதை மழுங்கடிக்க செய்தது.
**********************************************************************

"மெர்டேக்கா..."

"மெர்டேக்கா...."

ஆம். இன்று மலேசியாவின் ஐம்பதாவது சுதந்திர தினம். வண்ண வண்ண ஆடைகள் அணிந்துக் கொண்டு பலர் மலேசிய கொடிகளை ஏந்திவருவது கண் குளிரும் காட்சி.

ரங்கநாயகி மணமுடித்து தற்பொழுது முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. தனது கடந்து வந்த பாதைகளை சற்று நினைவுக்கூர்ந்தாள். எத்தனை எத்தனை முட்கள்?

திருமணமானவுடன் கணவரை பின்பற்றி நகரத்திற்கு வந்தாள். புதிய அனுபவங்கள் பலவற்றை அவள் சந்தித்தாலும், அவளது இலட்சியம் அவளது வருங்கால் சந்ததியினரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவது என்பதே.


அதற்கு அவள் பாடுபட்டது கொஞ்சம் நஞ்சமல்ல. படிப்பறிவு இல்லாதவளுக்கு நகரத்தில் கிடைத்த வேலை வீட்டைச் சுத்தப்படுத்தும் தொழில்தான். அதை நாணயமாக செய்தாள், அவளுடைய கணவனும் அவளது லட்சியத்தை அறிந்து அவளுக்கு துணையாக அயராது உழைத்தார்.


இன்று அவள் சொந்த வீடு கட்டி வசதியாக இருக்கிறாள். ஆனால் அதில் அவளுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியைவிட "உங்கள் பிள்ளைகளா அவர்கள்? என்னாமாய் படிக்கிறார்கள்..! எங்கு வேலைச் செய்கிறார்கள்?", என அனைவரும் கேட்கும் பொழுது, தனக்கே உரிய பாணியில் " அவர்கள் மருத்துவர்கள், அவர்கள் பொறியாளர்கள்" என்று சொல்கையில் பன்மடங்கு மகிழ்ச்சியடைகிறாள்.


மலேசியா சுதந்திரம் அடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இப்பொழுதுதான் அவள் தனது சுதந்திரத்தை உணர்கிறாள்...