Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

12 November 2009

உண்மையானால்....


பரபரப்பாக அனைவரும் தங்கள் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.காலையில் இருக்கும் உற்சாகத்தை விட அனைவரது முகத்திலும் ஒரு சிறு மகிழ்ச்சி தென்பட்டது. நாளை சனிக்கிழமை இனி இரு நாட்களுக்கு இந்த பரபரப்பான வாழ்க்கை இருக்காது.தங்களின் தனிபட்ட வாழ்க்கைக்கு இனி இருநாட்களும் அடிமை..


அவளும் தனது வேகமான நடையுடன் , தனது நாளைய அட்டவணையை மனதில் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.இன்னும் சில நிமிடத்தில் அவள் ஏற வேண்டிய இரயில் வந்துவிடும். அவள் அதனை விட்டுவிட்டால் இன்னும் ஐந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.ஐந்து நிமிடங்கள் மிக குறுகிய நேரமாக இருந்தாலும் , இந்த அவசர உலகத்தில் இந்த ஐந்து நிமிடங்கள் தாமதத்தினால் அவள் ஒரு மணிநேரம் வரை பேருந்திற்கு நிற்க நேரிடும்.
"சிஸ்டர்" என ஒரு பெண்மணியின் குரல் அவளது நடையின் வேகத்தை குறைக்க செய்தது."நான் ______ வரேன் . என் புருஷனுக்கும் மூனு மாசமா வேலை இல்லை.." தனது சொற்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.இவங்க‌ ஏன் இதை எல்லாம் என் கிட்ட சொல்லுறாங்க... தனது மனதிற்குள் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன..


"இன்னைக்கு நான் மிந்தி வேலை பார்த்த முதலாளி , என்னோட சம்பள பாக்கியை தரேனு சொன்னார். அதனால இங்க பஸ் எடுத்து வந்துட்டேன். கடைசி நிமிஷத்துல வரல அவர். திரும்பி போக என் கிட்ட காசு இல்லை. நேற்றுல இருந்து இன்னும் நாங்க சாப்பிடல.. பையனும் தான்.." தனது மூன்று வயது நிரம்பிய பையனை அவளிடம் காட்டினார் .


"ம்ம்ம்.. சாப்பாடு வாங்கி கொடுக்கலாமா? ஆனால் நேரமில்லையே.. நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் இரயில் நிலையம் செல்லாவிட்டால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமே.. என்ன செய்யலாம்?" .... தனது மூளையை கசக்கிக் கொண்டிருந்தாள்.
நம்பலாமா? ஒரு வேளை பொய் உரைத்திருந்தால்?

....


"என்னால் முடிந்தது. " எனறு தனது கைப்பையிலிருந்து ஒரு பத்து ரிங்கிட்டை எடுத்துக்கொடுத்தாள்.


"நீங்கள் கூறியது உண்மை என நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் பணம் தருகிறேன். முதலில் பையனுக்கு எதாவது வாங்கிக்கொடுங்கள்..."
"இல்லைங்க சிஸ்டர் . என் பையன் மேல சத்தியமா...." அவர் சொல்லி முடிப்பதற்குள்...


"வேண்டாங்க.. சத்தியம் எல்லாம் வேண்டாம்..." தனது நடையை துவங்கினாள், அந்த பெண்மணியின் நன்றி அவளின் காதில் விழவில்லை..


மனது மறுப‌டியும் ஐயம் கவ்விக் கொண்டது.. அவர் பொய் சொல்லியிருந்தால்?அதனால் என்ன? ... அவர் கூறியது உண்மையாயிருந்தால் அந்த சிறு பையன் பட்டினியால் இருப்பானே...மனதை தேற்றிக் கொண்டாள்

04 October 2008


நொண்டிக் கால்தட்டு


தடுமாறி அவள் வந்து நின்றாள். பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. கால் உடைந்து போய் இவ்வளவு தூரம் நடந்து வந்ததை பார்க்கவில்லை நான். அதைப் பார்க்கும் மன தைரியமில்லை. இருந்தாலும் பசிக்காக அவள் வந்திருந்ததை பார்க்க மனம் வாடியது. என்ன செய்ய? வீட்டில் இன்னும் சமைக்கவில்லை.


வீட்டில் ஒருத்தன் இருக்கிறான். மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க சாப்பிட சமைத்துப் போட்டாலும் அது வேண்டாம் இது வேண்டாம் என அடம் பிடித்து பட்டினியாக இருப்பவன் அவன். அவனுக்கு சமைத்து போடுவதை விட இவளை போன்றவர்களுக்கு சாப்பாடு போடுவது எவ்வள‌வோ மேல்.


என் முகத்தையே எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் என தெரியவில்லை. என்னிடம் எந்த பதிலுமில்லாததால் திரும்பி நடந்தாள். அந்த உடைந்து போன காலுடன் தத்தி தத்தி நடந்தாள். "நில்.. சற்று வருகிறேன்.." என்ன ஆச்சரியம் இதுவரை என்னுடன் பழகாதவள் அவள், என் சொல்லுக்கு கட்டுப்பட்டாள்.


சென்றேன் நேராக, எங்கள் வீட்டில் இருப்பவனுக்காக செய்து வைத்திருந்த சாப்பாடை போட்டேன் ஒரு தட்டில். சாதம் நிறைய போட்டு பிசைந்து போட்டேன். அவள் எனக்காக காத்திருப்பது தெரிந்தது. சாப்பாட்டை இரண்டு பாகமாக பிரித்தேன்.


ஏன் என்று கேட்கிறீர்களா ? அவளை சுற்றியிருந்த‌ அவளது சகாக்களுக்காக தான். இவளுக்கு மட்டும் சாதம் போட்டால் அவளை அவர்கள் உண்டு இல்லை என செய்துவிடுவார்கள். நிறைமாத கர்பிணியான அவளை அவர்கள் விரட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை.


ஒரு பாகத்தை அவளது சகாக்களுக்கு போட்டுவிட்டேன். அவளுக்கு தனியாக ஒரு இடத்தில் போட்டேன். சற்று பயத்துடன் வந்தாள். பசி என நினைக்கிறேன், தட்டை சுத்தம் செய்துவிட்டாள். இவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே அவளது இன்னொரு தோழி இவள் சாப்பாட்டை குறி வைத்துவிட்டாள்.


நானோ அங்கே நின்று அவளது சாப்பாட்டை காத்துக் கொண்டிருந்தேன். அந்த இன்னொருத்தியை மிரட்டினேன். அருகில் வந்தால் அடிதான் விழும் என்றேன். பொருமையாக‌ அவள் சாப்பிட்டாள். அவளுக்காக தண்ணீர் கொடுத்தேன். நொண்டியான அவள் எங்கே செல்வாள் தண்ணீருக்கு. அதையும் பருகி கிளம்பினாள் அந்த இடத்தை விட்டு.


சற்று தொலைவில் சென்ற பிறகு அவள் என்னை திரும்பி "மியாவ்" என நன்றி சொன்னது என் காதில் விழுந்த‌து.


08 August 2008

நிம்மதி...

நிம்மதி எங்கே என தேடும் மனிதா, சற்று நேரம் நில். உன் அருகிலேயே இருக்கின்ற என்னை ஏன் இப்படி கூவி கூவி அழைக்கின்றாய்? கை தொடும் தூரத்தில் இருக்கும் நான் ஏன் உன் கைகளுக்குள் சிக்கவில்லை? அது ஏன்?


உன் அருகில் நான் வரும் பொழுது எல்லாம், நீ என்னை விட்டு விலகினாயே, உனக்கு நினைவில்லையா? நான் உன் வீட்டு வாசலில் வெகு நேரம் நின்றிருந்தேனே அழையா விருந்தாளியாக, அப்பொழுதும் நீ என்னை மதிக்கவில்லையே!. எவ்வளவு நாட்கள் தான் நான் காத்திருக்கமுடியும்? என்னை மதிக்காத வீட்டில் நிற்பதை விட என்னை அழைக்கும் வீட்டில் இருப்பது மேல் என சென்றுவிட்டேன்.

என்னை விட உனக்கு பேரும் புகழும் முக்கியமாக இருந்தது. பணத்தாசை எனும் கொடிய நோய் உன்னை ஆட்டிப் படைத்தது. அதனால் நீ உன் சுய புத்தியினை இழந்தாய். பணம்தான் உன் மகிழ்ச்சி என நீ தேர்ந்தேடுத்தாய். நீ எனது எச்சரிக்கைகளை கேட்கவில்லை. பணப்பேயின் வலையில் நீ சிக்கிக்கொண்டாய். அது உன் கண்ணை மறைத்தது.

உனது பண வெறிக்கு பழியானவர்கள் எத்தனையோ பேர். ஏழையின் வயிற்றில் லஞ்சம் என்றப் பெயரில் எப்படி அடித்தாய்? நினைவு இருக்கிறதா? அன்று தனது மகனுக்கு கல்விக்காக உன்னிடம் கையேந்தி வந்தவரிடம், பணம் இருந்த்தால் பேசு இல்லையேல் வெளியே போ என வாய் கூசாமல் கூறினாயே, நினைவில் இருக்கிறதா? உன்னால் நோயாளிகளின் நாடியைப் பிடிக்க வேண்டிய கைகள் , சுண்டல் விற்றுக் கொண்டிருக்கிறது கடற்கரையோரம்!

பிறருக்கு மட்டுமா நீ தீங்கு செய்தாய்? உனது குடும்பத்தினருடனே நீ பாசமாக இருக்கவில்லையே! ஏன்? உனது ஐந்து வயது குழந்தை அவளது பிறந்த நாளுக்காக பல மணி நேரம் உன்க்காக காத்திருந்து தூங்கியும் போனாளே! நீ அவளிடம் பேசினாயா? பல லட்சம் அவள் பேரில் சேமித்து வைத்திருந்தால் போதாது. தக்க சமயத்தில் பாசம் எனும் உரத்தையும் கொடுக்க வேண்டும். அந்த குழந்தை , இன்னும் உன்னை போல பணத்தாசையில் பிடி படவில்லை மனிதனே!

எத்தனை காலம் தான் நீ இப்படி பட்ட தவறுகளை செய்ய போகிறாய்? இதோ இப்பொழுது நீ காவல் துறையினர் கையில் இருக்கிறாய்.! அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை மனிதனே! சேற்றில் முளைத்த செந்தாமரை போல கடமை கண்ணியம் கட்டுபாடு என மூன்று கோட்பாடுகளை தனது மூச்சாகக் கொண்டு ஒருவன் வந்தான். உனது கள்ள தொழில்களை முடக்கினான். உனக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்தான். இப்பொழுது உன்னை சிறையில் தள்ளியுள்ளான். உனது செல்வாக்கு உன்னை காப்பாற்றவில்லை. மனிதனே நீ இப்பொழுது உனது மரண நாட்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்!


என்னை நீ இப்பொழுது அழைக்கிறாயே? நான் என்ன செய்வது? எனது அருமை நன்கு அறிந்தவர்கள் வெகுசிலரே இன்னும் எஞ்சி உள்ளனர். நான் அவர்களிடமே இருந்துவிடுகிறேன். தயவு செய்து நீ என்னை விட்டுவிடு..

15 July 2008


தொழில்..

"டேய் கண்ணயா.. எங்க போய்ட்ட.. என்னை பார்தது ஓடிட்டயா? எவ்வளோ தைரியம் இருந்தா என்னோட தொழில் செய்யுற‌ இடத்துல நீ தொழில் பண்ணுவ?
ஒழுங்க வா வெளியே..", கால்கள் அவனை அங்குமிங்கும் தள்ளாடிக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொறு முறையும் தனது ஆவேசத்தில் தனது திரு வாயயைத் திறந்தாலே அங்கு கம கம என வாசனை வீசீற்று..

"இல்லை மாமா.. அப்பா வீட்டுல இல்லை..", அவனது சத்ததை தாங்க இயலாமல் ஒரு பையன் அந்த குடிசையிலிருந்து ஓடி வந்து சொன்னான்.

"என்னடா இல்லை.. அடிச்சேனா தெரியும்.. போ போய் உங்க அப்பனை கூப்பிடு..எவ்ளோ தைரியம் இருந்த நான் இருக்கிற இடத்துல‌ வந்து கேட்பான். போ..போ உங்கப்பனை கூப்பிடுறீய இல்லை உன்னை உதைக்கவா!", அந்த சிறுவனை உதைக்க காலைத் தூக்கியவன், அவனது உடலை சமாளிக்க முடியாமல் போதையில் கீழே விழுந்தான்.

அவனை தூக்கலாமா இல்லை வேண்டாமா என பதறிப் போய் நின்றான் அந்த சிறுவன்.

தனது கிழிந்துப் போன பனியனில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டவாரே, " டேய்.. என்னடா.. கிழ விழுந்தும் தூக்காம நிக்குற.. கொழுப்பா உனக்கு.." .அவனை அடிக்க மறுபடியும் கையை ஓங்கினான்.

"அண்ணே.. அவனை அடிக்காதீங்க... நான் தானே தப்பு செஞ்சேன் என்னை அடிங்க அண்ணே.."எங்கிருந்தோ ஓடிவந்தான் ஒருவன்.

"வா டா.. வா அதானே பார்த்தேன் எங்கடா ஆளை காணோம்னு.. எங்க போன? .. இன்னைக்கு ஏன் டா ஏன் இடத்துல வந்து கேட்ட? நம்ம தலைவரு ஆளுக்கு ஒரு இடம்னு பிரிச்சுதானே கொடுத்தாரு.. அப்புறம் ஏன் என்னோட இடத்துக்கு வந்த? "

"இல்லை அண்ணே.. என்னோட இடத்துல என்னமோ பாலம் காட்டுறாங்கலாம் அதனால யாரையும் அங்க தொழில் செய்ய விடல. அவசரத்துல இன்னைக்கு உங்க இடத்துக்கு வந்துட்டேன் . நான் நாளையில இருந்து அங்க தலை வச்சு படுக்க மாட்டேன் , அண்ணே. ", சற்று பயத்துடன் கூறினான் கண்ணையன்.

"அதனே பார்த்தேன், நாளைக்கு மட்டும் உன்னை அங்க பார்த்தேனா..அங்கயே ஒரு கொலை விழும்.." கீழே விழுந்து கிடந்த தனது பிச்சை எடுக்கும் தட்டை எடுத்து தள்ளாடிய படி "தொழில்" செய்யுமிடத்திற்கு சென்றான்..

06 July 2007

கறுப்பு

"கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.. அவன் கண்ணு இரண்டும்...."என வானொலியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்த அந்த பாட்டைக் கேட்டவுடன் ஆத்திரத்துடன் அதனை அடைத்தாள் வாசுகி. "ஏன், என்ன ஆச்சு. பாட்டு நல்லா தானே இருக்கு? இப்பொ ஏன் அதை அடைச்ச" என வினவினாள் அவளது தோழி வசந்தா.

"ஆமாம். பெண்களுக்கு மட்டும் தான் இந்த கறுப்புக் கலர் பிடிக்கும். எங்காவது ஆம்பளைங்க எனக்கு கறுப்புதான் பிடிக்கும்னு சொல்லியிருக்காங்களா? " என பொங்கி எழுந்தால் வாசுகி. அவளது ஆத்திரத்தை நன்கு புரிந்துக் கொண்டாள் வசந்தா.

ஆம் வாசுகியின் தோல் வர்ணம் கறுப்பு. சிறு வயது முதல் இந்த வர்ணத்தை பொருட்டாக அவள் கருதியதில்லை. படிப்பில் மிகவும் கெட்டி. தனது தோழிகள் தங்கள‌து சருமத்தைப் எப்படி பாதுகாப்பது, எப்படி வெண்மை ஆக்குவது என்பதை அவர்கள் பேசும் பொழுதும் கூட அவள் தனது வர்ணத்தை பொருட்டாக நினைத்தது இல்லை. அவளைப் பொறுத்தவரை அவளுக்கு முக்கியம் தனது படிப்பு, வாழ்க்கையில் தான் ஒரு உயரிய நிலையை அடைய வேண்டும். இதைதான் தனது வாழ்க்கையின் குறிக்கோளாக எண்ணியிருந்தாள்.

ஆனால் அறிவைவிட புற அழகு தான் முக்கியம் என ஒருவன் கூறிவிட்டான். அவன் பெயர் குணா. வாசுகிக்கு ஒரு நல்ல வரனை அவர்களின் வீட்டில் தேடியிருந்தார்கள். அவளை கட்டாயப்படுத்தி சம்மதம் வாங்கி, பெண்பார்க்க வரச் சொல்லியிருந்தார்கள்.

குணா, ஒரு கணினி மென்பொருளாளராக பணிபுரிகின்றான். அம்மா அப்பா மற்றும் ஒரு தங்கை. நால்வர் அடங்கிய குடும்பம். மாநிறமாக இருப்பான். குணாவின் அம்மா வாசுகியின் அம்மாவின் தோழி. அவரும் வாசுகியை பல முறைப் பார்த்திருக்கிறார். அவளின் மரியாதைக் குணம் மிகவும் பிடித்திருந்தது. ஆகவே அவராகவே வாசுகியை பெண் கேட்டார். நல்ல வரன் என்றால், எந்த பெற்றோர்தான் வேண்டாம் என்பார்கள்.

ப‌ட்டு புட‌வை கையில் தேநீருட‌ன் வ‌ந்தாள் வாசுகி. குணாவின் முக‌மோ ச‌ற்று க‌டுப்பாக‌ இருந்த‌து. என்ன‌டா இது என‌ ச‌ற்று ம‌ன‌ பார‌த்துட‌ன் உள்ளே சென்று விட்டாள். குணாவின் அம்மா, வாசுகியின் தோழி என்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு சிறிய‌ விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார்க‌ள். சாப்பிட்டு கை க‌ழுவ‌த‌ற்கு குணா ம‌ற்றும் அவ‌ன‌து அம்மாவும் ச‌ம‌ய‌ல் அறைக்கு சென்றிருந்த‌ வேளையில் அங்கு எதார்த்த‌மாக‌ குணா பேசிய‌து அவ‌ள‌து காதில் விழுந்த‌து.

"என்ன‌ அம்மா இது? பொண்ணு க‌றுப்புனு சொன்னீங்க‌, ஆனா காக்கா க‌ல‌ருனு சொல்ல‌வே இல்லை"க‌டுப்பான‌ குர‌லில் குணா. "டேய் என்ன‌டா? இப்ப‌டி சொல்லுற‌. அவ‌ த‌ங்க‌ம்டா. ரொம்ப‌ ந‌ல்ல‌வ. க‌ல‌ரா முக்கிய‌ம்!?" என்றார் அவ‌னின் அம்மா. "என‌க்கு முக்கிய‌ம் அம்மா. நீங்க‌ சும்மா இருங்க‌. என்னோட‌ ஃப்ர‌ண்ஸ் கிட்ட‌ அறிமுக‌ம் ப‌ன்னும் போது என‌க்கு பெருமையா இருக்க‌ வேண்டாமா? போங்க‌ம்மா எப்ப‌டியோ என‌க்கு இந்த‌ க‌ல்யாண‌த்துல‌ விருப்ப‌மில்லைனு சொல்லிடுங்க‌" என்றான்.

அனைவ‌ரும் உண்ட‌பிற‌கு விருந்தின‌ர் அறையில் அம‌ர்ந்திருந்தார்க‌ள். வாசுகி த‌ன‌து அம்மாவிட‌ம் எதோ முணுமுணுத்தாள். அவ‌ள‌து அம்மாவோ அவ‌ளை ச‌ற்று எரிச்ச‌லுட‌ன் பார்த்துவிட்டு, குணா அம்மாவிட‌ம் வ‌ந்து "அவ‌ பைய‌ன்கிட்ட‌ பேச‌னுமாம்.." இழுத்தார் வாசுகியின் அம்மா. குணா ச‌ற்று அதிர்ச்சியுட‌ன் "ச‌ரி ஆண்ட்டி.." என‌, இருவ‌ரையும் மொட்டை மாடியில் விட்டுவிட்டார்க‌ள்.

"வ‌ண‌க்கம். உங்க‌ அம்மாகிட்ட‌ நீங்க‌ பேசும்போது நான் அங்க‌ த‌ற்செய‌லாக‌ வ‌ந்தேன். அப்பொ நீங்க‌ சொன்ன‌து கேட்ட‌து. என்னைப் ப‌ற்றி பேச‌ன‌தால‌ கேட்டேன். என் க‌ல‌ரை ப‌ற்றி ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டீங்க‌. நீங்க‌ சொல்லுற‌ மாதிரியே ஒரு ந‌ல்ல‌ க‌ல‌ர் பெண்ணை தேர்ந்தெடுத்து க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகீங்க‌. உங்க‌ அம்மாவுக்கு ஏத்த‌ ம‌ரும‌க‌ளாக‌வும் தேடுங்க‌. ஏன்ன‌ அவ‌ங்க ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌. நான் எங்க‌ அம்மாகிட்ட‌ பேசிக்கிறேன் நீங்க‌ கிள‌ம்புங்க‌." என‌ ம‌ட‌ ம‌ட‌ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்." ம‌ன்னிச்சுடுங்க‌" அப்ப‌டினு குணா சொன்ன‌தைக் கூட‌ அவ‌ள் பொருட்ப‌டுத்த‌வில்லை.

" என்ன‌டீ வாசுகீ? என்ன‌ ம‌றுப‌டியும் அதே நினைப்பா? எல்லோரும் அப்ப‌டி இருக்க‌ மாட்டாங்க‌. அத‌ற்கு ஏன் இப்ப‌டி க‌வ‌லையா இருக்க‌?" வாசுகி த‌ன்னை அறியாம‌ல் இருந்த‌தை அறிந்து வ‌ச‌ந்தா அவ‌ள‌து தோளை உலுக்கினாள்.
"இப்பொழுது என் க‌லரைப் பார்த்து நான் க‌வ‌லை ப‌டவில்லை, ஆனால் ஒன்று ம‌ட்டும் புரிய‌மாட்டேங்குது. அழ‌கான‌ பெண்க‌ள் எத்த‌னை பேர், அழ‌கு வர்ணம் பார்க்காம‌ல் ஆண்க‌ளை க‌ல்யாண‌ம் செய்யுறாங்க‌. ஆனால் எத்த‌னை ஆண்க‌ள் பெண் அழ‌கா இல்லாட்டியும் ப‌ரவாயில்லை ந‌ல்ல‌ ப‌ண்பு இருக்க‌னும்னு சொல்லுறாங்க‌? ஆயிர‌த்தில் ஒருவ‌ர்? அப்பொ மீதி உள்ள‌ பெண்க‌ளின் நிலை என்ன‌? என்ன‌னு ந‌ம்ம‌ சொல்லுற‌து இந்த‌ மாதிரி ஆண்க‌ளை எல்லாம்?" குமுறினாள் வாசுகி.

"இப்பொழுது ஆயிர‌த்தில் ஒருவ‌ர், பிற‌கு நூற்றில் ஒருவ‌ர், இப்ப‌டியே கால‌ம் மாறும். க‌வ‌லை வேண்டாம்" என்றாள் வ‌ச‌ந்தா. "ஆமாம் , நீ சொல்லுர‌து ஒரு நூறு வ‌ருட‌த்திற்கு பிற‌கு தான் ந‌ட‌க்கும், ஹா ஹா" என‌ எப்ப‌டியோ இருவ‌ரும் சூழ்நிலையை ச‌ற்று திசைத்திருப்பிவிட்ட‌ன‌ர்.