கறுப்பு
"கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.. அவன் கண்ணு இரண்டும்...."என வானொலியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்த அந்த பாட்டைக் கேட்டவுடன் ஆத்திரத்துடன் அதனை அடைத்தாள் வாசுகி. "ஏன், என்ன ஆச்சு. பாட்டு நல்லா தானே இருக்கு? இப்பொ ஏன் அதை அடைச்ச" என வினவினாள் அவளது தோழி வசந்தா.
"ஆமாம். பெண்களுக்கு மட்டும் தான் இந்த கறுப்புக் கலர் பிடிக்கும். எங்காவது ஆம்பளைங்க எனக்கு கறுப்புதான் பிடிக்கும்னு சொல்லியிருக்காங்களா? " என பொங்கி எழுந்தால் வாசுகி. அவளது ஆத்திரத்தை நன்கு புரிந்துக் கொண்டாள் வசந்தா.
ஆம் வாசுகியின் தோல் வர்ணம் கறுப்பு. சிறு வயது முதல் இந்த வர்ணத்தை பொருட்டாக அவள் கருதியதில்லை. படிப்பில் மிகவும் கெட்டி. தனது தோழிகள் தங்களது சருமத்தைப் எப்படி பாதுகாப்பது, எப்படி வெண்மை ஆக்குவது என்பதை அவர்கள் பேசும் பொழுதும் கூட அவள் தனது வர்ணத்தை பொருட்டாக நினைத்தது இல்லை. அவளைப் பொறுத்தவரை அவளுக்கு முக்கியம் தனது படிப்பு, வாழ்க்கையில் தான் ஒரு உயரிய நிலையை அடைய வேண்டும். இதைதான் தனது வாழ்க்கையின் குறிக்கோளாக எண்ணியிருந்தாள்.
ஆனால் அறிவைவிட புற அழகு தான் முக்கியம் என ஒருவன் கூறிவிட்டான். அவன் பெயர் குணா. வாசுகிக்கு ஒரு நல்ல வரனை அவர்களின் வீட்டில் தேடியிருந்தார்கள். அவளை கட்டாயப்படுத்தி சம்மதம் வாங்கி, பெண்பார்க்க வரச் சொல்லியிருந்தார்கள்.
குணா, ஒரு கணினி மென்பொருளாளராக பணிபுரிகின்றான். அம்மா அப்பா மற்றும் ஒரு தங்கை. நால்வர் அடங்கிய குடும்பம். மாநிறமாக இருப்பான். குணாவின் அம்மா வாசுகியின் அம்மாவின் தோழி. அவரும் வாசுகியை பல முறைப் பார்த்திருக்கிறார். அவளின் மரியாதைக் குணம் மிகவும் பிடித்திருந்தது. ஆகவே அவராகவே வாசுகியை பெண் கேட்டார். நல்ல வரன் என்றால், எந்த பெற்றோர்தான் வேண்டாம் என்பார்கள்.
பட்டு புடவை கையில் தேநீருடன் வந்தாள் வாசுகி. குணாவின் முகமோ சற்று கடுப்பாக இருந்தது. என்னடா இது என சற்று மன பாரத்துடன் உள்ளே சென்று விட்டாள். குணாவின் அம்மா, வாசுகியின் தோழி என்பதால் அவர்களுக்கு சிறிய விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பிட்டு கை கழுவதற்கு குணா மற்றும் அவனது அம்மாவும் சமயல் அறைக்கு சென்றிருந்த வேளையில் அங்கு எதார்த்தமாக குணா பேசியது அவளது காதில் விழுந்தது.
"என்ன அம்மா இது? பொண்ணு கறுப்புனு சொன்னீங்க, ஆனா காக்கா கலருனு சொல்லவே இல்லை"கடுப்பான குரலில் குணா. "டேய் என்னடா? இப்படி சொல்லுற. அவ தங்கம்டா. ரொம்ப நல்லவ. கலரா முக்கியம்!?" என்றார் அவனின் அம்மா. "எனக்கு முக்கியம் அம்மா. நீங்க சும்மா இருங்க. என்னோட ஃப்ரண்ஸ் கிட்ட அறிமுகம் பன்னும் போது எனக்கு பெருமையா இருக்க வேண்டாமா? போங்கம்மா எப்படியோ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைனு சொல்லிடுங்க" என்றான்.
அனைவரும் உண்டபிறகு விருந்தினர் அறையில் அமர்ந்திருந்தார்கள். வாசுகி தனது அம்மாவிடம் எதோ முணுமுணுத்தாள். அவளது அம்மாவோ அவளை சற்று எரிச்சலுடன் பார்த்துவிட்டு, குணா அம்மாவிடம் வந்து "அவ பையன்கிட்ட பேசனுமாம்.." இழுத்தார் வாசுகியின் அம்மா. குணா சற்று அதிர்ச்சியுடன் "சரி ஆண்ட்டி.." என, இருவரையும் மொட்டை மாடியில் விட்டுவிட்டார்கள்.
"வணக்கம். உங்க அம்மாகிட்ட நீங்க பேசும்போது நான் அங்க தற்செயலாக வந்தேன். அப்பொ நீங்க சொன்னது கேட்டது. என்னைப் பற்றி பேசனதால கேட்டேன். என் கலரை பற்றி ரொம்ப வருத்தப்பட்டீங்க. நீங்க சொல்லுற மாதிரியே ஒரு நல்ல கலர் பெண்ணை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிகீங்க. உங்க அம்மாவுக்கு ஏத்த மருமகளாகவும் தேடுங்க. ஏன்ன அவங்க ரொம்ப நல்லவங்க. நான் எங்க அம்மாகிட்ட பேசிக்கிறேன் நீங்க கிளம்புங்க." என மட மட என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்." மன்னிச்சுடுங்க" அப்படினு குணா சொன்னதைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை.
" என்னடீ வாசுகீ? என்ன மறுபடியும் அதே நினைப்பா? எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்க. அதற்கு ஏன் இப்படி கவலையா இருக்க?" வாசுகி தன்னை அறியாமல் இருந்ததை அறிந்து வசந்தா அவளது தோளை உலுக்கினாள்.
"இப்பொழுது என் கலரைப் பார்த்து நான் கவலை படவில்லை, ஆனால் ஒன்று மட்டும் புரியமாட்டேங்குது. அழகான பெண்கள் எத்தனை பேர், அழகு வர்ணம் பார்க்காமல் ஆண்களை கல்யாணம் செய்யுறாங்க. ஆனால் எத்தனை ஆண்கள் பெண் அழகா இல்லாட்டியும் பரவாயில்லை நல்ல பண்பு இருக்கனும்னு சொல்லுறாங்க? ஆயிரத்தில் ஒருவர்? அப்பொ மீதி உள்ள பெண்களின் நிலை என்ன? என்னனு நம்ம சொல்லுறது இந்த மாதிரி ஆண்களை எல்லாம்?" குமுறினாள் வாசுகி.
"இப்பொழுது ஆயிரத்தில் ஒருவர், பிறகு நூற்றில் ஒருவர், இப்படியே காலம் மாறும். கவலை வேண்டாம்" என்றாள் வசந்தா. "ஆமாம் , நீ சொல்லுரது ஒரு நூறு வருடத்திற்கு பிறகு தான் நடக்கும், ஹா ஹா" என எப்படியோ இருவரும் சூழ்நிலையை சற்று திசைத்திருப்பிவிட்டனர்.
06 July 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hmm..... gud one, its the truth.
It not only happens for girls. its for all who are not looking smart at the age 18-30.... some times more.
I feel thats gud. some times i think we get gud wife/husband who doest not care abt my outer view and who cares of my character.
Post a Comment