12 November 2009

உண்மையானால்....


பரபரப்பாக அனைவரும் தங்கள் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.காலையில் இருக்கும் உற்சாகத்தை விட அனைவரது முகத்திலும் ஒரு சிறு மகிழ்ச்சி தென்பட்டது. நாளை சனிக்கிழமை இனி இரு நாட்களுக்கு இந்த பரபரப்பான வாழ்க்கை இருக்காது.தங்களின் தனிபட்ட வாழ்க்கைக்கு இனி இருநாட்களும் அடிமை..


அவளும் தனது வேகமான நடையுடன் , தனது நாளைய அட்டவணையை மனதில் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.இன்னும் சில நிமிடத்தில் அவள் ஏற வேண்டிய இரயில் வந்துவிடும். அவள் அதனை விட்டுவிட்டால் இன்னும் ஐந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.ஐந்து நிமிடங்கள் மிக குறுகிய நேரமாக இருந்தாலும் , இந்த அவசர உலகத்தில் இந்த ஐந்து நிமிடங்கள் தாமதத்தினால் அவள் ஒரு மணிநேரம் வரை பேருந்திற்கு நிற்க நேரிடும்.
"சிஸ்டர்" என ஒரு பெண்மணியின் குரல் அவளது நடையின் வேகத்தை குறைக்க செய்தது."நான் ______ வரேன் . என் புருஷனுக்கும் மூனு மாசமா வேலை இல்லை.." தனது சொற்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.இவங்க‌ ஏன் இதை எல்லாம் என் கிட்ட சொல்லுறாங்க... தனது மனதிற்குள் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன..


"இன்னைக்கு நான் மிந்தி வேலை பார்த்த முதலாளி , என்னோட சம்பள பாக்கியை தரேனு சொன்னார். அதனால இங்க பஸ் எடுத்து வந்துட்டேன். கடைசி நிமிஷத்துல வரல அவர். திரும்பி போக என் கிட்ட காசு இல்லை. நேற்றுல இருந்து இன்னும் நாங்க சாப்பிடல.. பையனும் தான்.." தனது மூன்று வயது நிரம்பிய பையனை அவளிடம் காட்டினார் .


"ம்ம்ம்.. சாப்பாடு வாங்கி கொடுக்கலாமா? ஆனால் நேரமில்லையே.. நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் இரயில் நிலையம் செல்லாவிட்டால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமே.. என்ன செய்யலாம்?" .... தனது மூளையை கசக்கிக் கொண்டிருந்தாள்.
நம்பலாமா? ஒரு வேளை பொய் உரைத்திருந்தால்?

....


"என்னால் முடிந்தது. " எனறு தனது கைப்பையிலிருந்து ஒரு பத்து ரிங்கிட்டை எடுத்துக்கொடுத்தாள்.


"நீங்கள் கூறியது உண்மை என நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் பணம் தருகிறேன். முதலில் பையனுக்கு எதாவது வாங்கிக்கொடுங்கள்..."
"இல்லைங்க சிஸ்டர் . என் பையன் மேல சத்தியமா...." அவர் சொல்லி முடிப்பதற்குள்...


"வேண்டாங்க.. சத்தியம் எல்லாம் வேண்டாம்..." தனது நடையை துவங்கினாள், அந்த பெண்மணியின் நன்றி அவளின் காதில் விழவில்லை..


மனது மறுப‌டியும் ஐயம் கவ்விக் கொண்டது.. அவர் பொய் சொல்லியிருந்தால்?அதனால் என்ன? ... அவர் கூறியது உண்மையாயிருந்தால் அந்த சிறு பையன் பட்டினியால் இருப்பானே...மனதை தேற்றிக் கொண்டாள்

No comments: