18 January 2007

மறு வாய்ப்பு

"அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்!!", சின்னஞ்சிறு வாண்டு ஒன்று தனது அம்மாவின் சேலையை பிடித்துக் கொண்டு சிணுங்கி அழுதுக் கொண்டிருந்தான். அவனது குட்டி உடம்பிற்கு ஒரு குட்டி டீசெர்ட்டும் ஜீன்ஸும் அளவு எடுத்து தைத்தது போல இருந்தது.
தனது அம்மாவிடம் போலியாக சிணுங்கிக் கொண்டு அவன் அழுதது சற்று வேடிக்கையாக இருந்தது. தனது அம்மாவுக்கு பிள்ளைகள் அழுவது பிடிக்காது என்று அந்த வயதிலேயே நன்றாக தெரிந்து வைத்திருந்தான் தருண்.
"என்னடா கண்ணா?, என்ன ஆச்சு? இப்போ தானே டாக்டர் மாமா கிட்ட போயிட்டு வந்தோம். இன்னும் ஊசி போடணுமா? "என்று தனது அம்மா கேட்டவுடன் அவசரமாக வேண்டாமம்மா என்று மறுதளித்தான். அவன் கண்கள் குளமாகியதைப் பார்த்து பதறினாள் மாதவி.
"சரிடா கண்ணா, ஊசி வேண்டாம். இப்போ ஐஸ்கிரீமும் வேண்டாம். நான் உனக்கு இரண்டு வாரம் கழிச்சி வாங்கித்தர்றேன்" என்று தனது சுட்டிப் பிள்ளையை சமாளித்தாள் மாதவி.
"அப்பா....! அவர்களை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்த அப்பாவை நோக்கி ஓடினான் தருண். "அப்பா..அப்பா, அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர்றதா சொல்லி இருக்காங்க. நீங்களும் ஒண்ணு வாங்கித்தரணும்!" என்று அன்பு கட்டளையிட்டான். அந்த அன்புக் கட்டளைக்கு தலையை ஆட்டினார் ராகவன்.
ராகவனுக்கும் மாதவிக்கும் கல்யாணம் ஆகி பன்னிரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. மணவாழ்க்கை நன்றாக இருந்தாலும் நீண்ட காலம் பிள்ளையில்லாமல் அவர்கள் ஏங்கி வந்தார்கள். அவர்களின் அந்த ஏக்கத்தை தீர்த்தவன் தருண். பன்னிரண்டு வருடங்கள் குழந்தைப் பிறக்காமல் அவர்கள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. மாதவியை உற்றார் உறவினர்கள் அவதூறு பேசியும் தூற்றியும் கேவலப்படுத்தியது எல்லாம் இன்னும் ராகவன் நினைவில் மாறாத வடுக்களாக இருக்கின்றது.
மருத்துவர் சான்றிதழ் வைத்து இருந்தாலும் மாதவியை மட்டுமே குறைக் கூறியது உறவினர்கள் கூட்டம். இவர்களுக்கு நூறு சதவிதம் பிள்ளைகள் பெற தகுதியும், வாய்ப்பும் இருக்கிறது என்று மருத்துவர்கள் பலமுறை கூறி இருந்தாலும் அதை பற்றி சிறிதும் சிந்திக்காமல் மனசாட்சியே இல்லாமல் பலமுறை இவர்களின் நிம்மதியை குலைக்கும் வண்ணம் பேசியும், ஏசியும் வந்தார்கள். ஆனால் யார் எப்படி பேசினாலும் தனது மனவியை எந்தக் காரணம் கொண்டும் ராகவன் விட்டுக் கொடுக்கவில்லை. ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று மாதவி பலமுறை எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், அப்படி எடுத்தால் அது நமக்கு இரண்டாவது பிள்ளையாக மட்டும் தான் இருக்கவேண்டும். மேலும் இப்பொழுது தத்து எடுத்தால் அது நமக்குள் ஒரு குறை இருப்பதை ஒத்துக் கொள்வதற்கு சமம் என்று பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து விட்டான்.
இறைவன் அவர்களை ஏமாற்றவில்லை. தாமதமாக இருந்தாலும் தருண் வடிவில் அவர்களின் வேண்டுதலை இறைவன் நீண்ட காலம் கழித்து நிறைவேற்றினான். தருண் அவர்கள் வாழ்க்கையில் வந்ததில் இருந்து இது வரைக்கும் ஒரு துளி துன்பத்தைக்கூட அவர்கள் உணர்ந்தது இல்லை.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்த ராகவன் மனைவியின் குரலை கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தார். பன்னிரெண்டு வருடம் காத்திருந்தாலும் அந்த காத்தல் வீண்போகவில்லை என்று மனம் மகிழ்ந்தது. .
மாதவியிடம் பேசிக் கொண்டே தனது வாகனத்தை செலுத்தினார். திடீர் என்று அவரின் கைதொலைபேசி அலறும் சத்தம் கேட்டது. அவரோ தன்னிடம் இருக்கும் காது இணைப்பானை பயன்படுத்தாமல் ஒரு கையால் வண்டியை ஓட்டிக்கொண்டே மறுகையால் கைப்பேசியில் உரையாடினார். அழைத்தது யாருமில்லை அவரது அம்மாதான்.
அந்த அழைப்பு அவரின் கவனத்தை சிறிது சிதற வைத்தது. அவருக்கு முன்னால் மிகவும் மெதுவாக ஒரு சரக்கு வாகனம் ஆமை போல நகர்ந்துக்கொண்டிருந்தது. அதை தாண்டுவதற்காக அடுத்தப் பாதைக்கு மாறினார். அப்பொழுது மிகவும் வேகமான அடுத்த பாதையில் வந்துக் கொண்டிருந்த ஒரு வேனை கண்டதும் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறினார். அந்த கணத்தில் அவருக்கு கேட்டதெல்லாம் ஒரு பயங்கரமான க்ரீச்...சத்தம் மட்டுமே.
****************************************************************************************************
மீண்டும் ராகவனுக்கு நினைவு திரும்பும்பொழுது அவர் படுக்கையை சுற்றி அவனது பெற்றோர்களும் அவனது ஒரே தங்கையும் அழுதுக்கொண்டிருந்தனர். ராகவனால் தலையை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. மிகவும் பாரமாக இருந்தது. அதை விட அவனது நெஞ்சு மிக பயங்கரமாக வலித்தது. அவனால் அந்த வலியை கொஞ்சம்கூட தாங்க முடியவில்லை. ஏதேதோ நினைவுகள் வந்து வந்து போயின. எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை.
திடீரென்று ஒரு குழந்தையின் அழுக்குரல் எங்கேயோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. ஆஹா... நினைவுக்கு வந்து விட்டது "தருண்... மாதவி!!" அவர்கள் எங்கே? அவர்களும் என்னுடன் தானே இருந்தார்கள்? அவர்களுக்கு என்ன ஆயிற்று? ஒன்றும் புரியவில்லை, பேசவும் முடியவில்லை. மூளை மரத்தது போல இருந்தது. தலையில் ஆணியால் அடிப்பது போல ஒரு உணர்வு. மிகவும் கஸ்டப்பட்டு அந்த வலியையும் பொருட்படுத்தாமல் மாதவி தருண் என்று முனகினான்.
அவனை சுற்றி இருந்தவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தார்கள். உண்மை சம்பவத்தை எப்படி சொல்வது? சொல்லாமல் எப்படி இருப்பது என்றும் யாருக்கும் தெரியவில்லை.
அவர்களின் முகவாட்டம் இன்னும் மனதில் பயத்தை உண்டாக்கியது. ராகவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் உடலை அசைக்கும் பொழுது மரண வலிதான் அவனுக்கு ஏற்பட்டது.
எழவும் முடியாமல் பேசவுல் முடியாமல் அவன் பட்ட வேதனையை தாங்காமல் உண்மையை போட்டு உடைத்தாள் அவனது தங்கை. "அண்ணியும் தருணும் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துட்டாங்க அண்ணா!" என்று கூறி ஓவென்று அழுதாள்.
அதைக் கேட்ட மறுகணம் ராகவன் தனது சுயநினைவை இழந்தார். அவனுக்கு எல்லாமே இருட்டாக தெரிந்தது. மீண்டும் நினைவு திரும்பும் பொழுது ராகவன் விபத்துக்குள்ளாகி ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.
இப்பொழுது அவனது நிலை சற்றே தேறி இருந்தது. மனைவி மகனை இறுதியாக கூட ஒருமுறையேனும் தனக்கு பார்க்க கொடுத்துவைக்கவில்லையே என்ற தாங்க முடியாத வேதனையில் கண்கள் நீர்கோத்து நின்றது. அன்று மட்டும் தான் கவனமாக ஓட்டிச் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா? கடவுளே எனக்கு தயவு செய்து இன்னுமொரு வாய்ப்பை தா. என்னை மறுபடியும் அந்த விபத்து நடப்பதற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல். இந்த கொடூரம் நிகழாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். அன்று மட்டும் நான் வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசாமல் சிறிது கவனமாக இருந்திருந்தால்........

No comments: