18 January 2007

கனவே கலைந்து விடு

"சார் .. சார் ..", யாரோ தன்னை அழைப்பது போன்ற ஒரு உணர்வு. எதையும் பொருட்படுத்தாமல் அவன் தனது போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தனது தூக்கத்தை தொடர்ந்தான்.
"சார்.. சார்" அதே குரல் மீண்டும் கேட்டது "என்னடா இது ஒரு மனுஷனெ நிம்மதியா தூங்கவிடுறங்களா!?" இவள் எங்கே போய் தொலைந்தாள், என எரிச்சலுடன் மனைவியை கூப்பிட்டான், இல்லை கத்தினான். தனது கூச்சலுக்கு யாரும் பதில் அளிக்காததை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான்.
"என்னடா! இது எப்பொழுதும் வீட்டில் இருக்கும் இவள் இன்று எங்கே போய் தொலைந்தாள்?", என்று குரல் கேட்ட திசையை நோக்கி முணுமுணுத்துக்கொண்டெ எரிச்சலுடன் சென்றான்.
"சார்...சார்", இன்னும் அந்த குரலின் தொந்தரவு நிற்கவில்லை. "யார்டா இது?.. இப்படி ரொம்ப நேரமா கழுத்தை அறுக்கிறானே." என்று முனகிக் கொண்டே வாசல் கதவை திறந்தார்.
"என்ன இது ஏன் இவ்வளவு கூட்டம்...?" என்ற தனது வியப்பை அடக்கிக் கொண்டு. "என்ன சார்! ஏன் இவ்ளோ கூட்டம்? என்ன ஆச்சு இப்பொ?", என சராமாரியாக கூட்டத்தை பார்த்து கேள்விகளை கேட்டார்.
கூட்டத்தில் ஒருவர், "உங்க பேரு ராஜன் தானே சார்?", "ஆமாம்" . "நீங்க வாங்கின லாட்டரி சீட்டுக்கு ஒரு லட்சம் விழுந்திருக்கு சார். வாழ்த்துக்கள் சார். அதான் உங்களை பேட்டி எடுக்க நிறைய பத்திரிகைகளில் இருந்து நிருபர்கள் வந்து இருக்காங்க", ஒருவர் சொல்லி முடிப்பதற்குள் அவனை சுற்றி இருந்தவர்கள் மாறி மாறி அவனிடம் கேள்வி கேட்க தொடங்கினார்கள்."சார் எப்படி நீங்க இவ்வளவு அதிர்ஸ்டசாலியா இருக்கீங்க? ஏதாவது தனி பயிற்சி எடுக்கறீங்களா?" இப்படி அர்த்தம் இல்லாத பல கேள்விகள் அவனை அம்பு மாதிரி துளைத்து எடுத்தன. அப்பொழுதே நினைத்தான் , என்னடா இது கேள்விகள் எல்லாம் சற்று கோமாளிதனமாக இருக்கிறதே என்று. அந்த எண்ணங்களை சற்று தள்ளி வைத்து விட்டு அவன் அவர்களுக்கு பதில் சொலல முயற்சித்தான்.
"சார் இங்க பாருங்க.. சிரிங்க சார்.." என்று ஒருவர் கூட்டத்தில் இருந்து தனது கையில் உள்ள கேமிரா மூலம் புகைப்படம் எடுக்க முயற்சித்தார். அவரது கேமிராவில் இருந்து வந்த ஒளியால் கண்கள் கூசியதுமல்லாமல் ஏதோ ஈரமாக இருப்பது போல உணர்வு?!
ஈரமா!, "அய்யோ அம்மா " என்று அலறியடித்துக் கொண்டு தனது கட்டிலில் இருந்து விழுந்தான் ராஜன். கண் விழித்து பார்த்ததில் தான் தெரிந்தது அவரது மனைவி கையில் ஒரு காலி குடத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தாள். அருகில் பார்த்தான். தண்ணீர் அறை முழுவதும் கொட்டியிருந்தது. தூக்க கலக்கத்தில் கட்டிலுக்கு அருகில் மனைவி எடுத்து வைத்திருந்த குடத்தை உதைத்திருந்ததும் அதிலிருந்து தண்ணீர் கொட்டியிருந்ததும் தெரிந்தது.
"என்னடீ.. என்ன செஞ்ஜெ" என்று தனது ஆத்திரத்தை மனைவியிடம் காட்டினான். " என்னங்க, வேலைக்கு நேரம் ஆச்சு. உங்களால இப்பொ ஒரு குடம் தண்ணீர் வீணாக்ப் போயிடுச்சு. சீக்கிரம் வேலைக்கு கிளம்புங்க..".
"ஏன்டி என் உயிரை வாங்குறெ காலங்காத்தால...? ஒரு ஆயிரம் வெள்ளி சம்பளத்துக்காக என்னை இப்படி வாட்டி எடுக்கிறேயே... இன்னும் கொஞ்ச நாள்ல பாரு எனக்கு ஒரு லட்சம் கிடைக்க போகுது. அப்போ நான் இருபத்தி நாலு மணி நேரமும் தூங்கத்தான் போறேன். அப்ப நீ என்னிடம் இப்படி எல்லாம் தொந்தரவு செய்ய மாட்டே!" தனது கணவனின் இந்தப் பேச்சைக்கேட்டு அவள் தன்னையே நொந்துக்கொண்டு தன் தலையிலடித்துக்கொண்டாள்.
இது அன்றாடம் அவளது வாழ்க்கையில் நடப்பது தான். காலையில் தனது கணவரை மிகவும் சிரமப்பட்டு வேலைக்குச் அனுப்ப அவள் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. இவளுக்கு வேலைக்கிடைத்தப்பிறகுதான் சூழ்நிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. வீட்டுக்கு தேவையான பொருட்களை முடிந்த அளவு அவளே வாங்கி சமாளித்துக்கொள்கிறாள். இருந்தாலும் வீட்டு வாடகை, மின் கட்டணம், குழந்தைகளுக்கான பள்ளிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு பல நேரங்களில் தனது கணவரின் கையை அல்லவா அவள் எதிர்பார்க்க நேரிடுகிறது.
முன்பு எல்லாம் ராஜன் இப்படி இல்லை. மிகவும் பொறுப்புள்ள மனிதராக இருந்தார். ஆரம்பத்தில் தனது சம்பளத்தில் இருந்து ஒரு மிகச்சிறியதொரு தொகையை மட்டும் லாட்டரி எடுக்க செலவழிப்பான். இரண்டு மூன்று தடவை அவருக்கு அதிர்ஷ்டவசமாக கொஞ்சம் தொகை கிடைத்தது. அதில் இருந்து லாட்டரிமேல் அவருக்கு ஒரு வெறி ஏற்பட்டுவிட்டது. இந்த வெறியானது நாளடைவில் அவன் குடும்பத்திற்கே சோதனையாக வந்தது. முதலில் சிறு தொகையை செலவழித்தவன், பிறகு தனது முழு சம்பளத்தையும் லாட்டரிக்கே செலவழித்தான்.
பாவம் அவனது மனைவி, ராஜனின் இந்த மாற்றத்தால் மிகவும் நொந்து போனாள். இதனால அடிக்கடி வீட்டில் சண்டை. காலப்போக்கில் சண்டை போடுவதால் எந்த பயனுமில்லை என்று தெரிந்துக் கொண்டு அவளே ஒருமுடிவுடன் வேலைக்கு செல்லத் தொடங்கினாள்.படிப்பறிவு குறைவாக இருந்ததால் ஒரு சிறிய தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளி வேலைத்தான் அவளுக்கு கிடைத்தது. தனது கணவரின் பொறுப்பில்லாத செயலால் பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தால்தான் அவள் சிரமத்தைப் பாரக்காமல் அந்த வேலைக்கு சென்று வருகிறாள்.
அன்றும் அப்படிதான் அவள் தனது வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் சாலையை கடக்கையில் வேகமாக வந்த ஒரு லாரியில் மோதி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டாள். இந்த செய்தி தெரிந்தவுடன் அரக்க பரக்க மருத்துவமனைக்கு ஓடினான் ராஜன். அங்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவளுக்கு ஒரு அவசர சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு உண்டான பணத்தை சீக்கிரம் மருத்துவமனையில் கட்டுமாறும் மருத்துவர் கூறிவிட்டார்.
கையை பிசைந்து நின்றான் ராஜன். அவனது பணப்பையில் இருந்தது சில .. இல்லை இல்லை பல லாட்டரி சீட்டுகள் மட்டுமே. தன் சம்பளத்தில் முக்கால் வாசி வெறும் லாட்டரி சீட்டுகள் மட்டும் வாங்கவே செலவழித்து விட்டான். இப்பொழுது அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது? யாரை கேட்பது?
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான். வீட்டிற்கு சென்று மனைவியின் நகைகள் ஏதாவது கிடைக்கிறதா என பார்க்கலாம் என்று எண்ணினான். வீட்டிற்கு சென்று அலமாரிகளை அலசினான். அங்கு ஏராளமான லாட்டரி சீட்டுக்கள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. எத்தனை சீட்டுகள். இத்தனை சீட்டுக்களும் அவன் வாங்கியவையா? அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. சற்று நேரம் மனக்கணக்கு போட்டான் தான் இந்த சீட்டு வாங்கி கரியாக்கிய பணம் எவ்வளவு என்று. அம்மாடியோவ்! இவ்வளவு தொகையா! இவ்வளவுபணத்தை சேமித்து வைத்து இருந்தால் இந்நேரம் நான் ஒரு நல்ல நிலைக்கு வந்து இருப்பேனே! லாட்டரியில் போட்டுவிட்டேனே என ஒருகணம் வேதனையுடன் நினைத்தான். தனது பொறுப்பற்ற செயலால் இப்பொழுது மருத்துவமனை செலவிற்கு கூட பணமில்லாமல் திண்டாடுவதைக் கண்டு மிகுந்த மனவேதனையும் தன் மீதே வெறுப்பும் கொண்டான். இனிமேல் இம்மாதிரி நடப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டான். அவன் கையில் கிடைத்த அவன் மனைவியின் ஒரே ஒரு ஆரம். மிகவும் வருத்தத்துடன் அதை எடுத்துக்கொண்டு கடைக்கு அடகு வைக்க சென்றான். அப்பொழுது ஒரு சிறுவன் "சார் சார் வாங்குங்க லாட்டரி வாங்குங்க சார். ரொம்ப அதிர்ஷ்ட நம்பர் சார். பாருங்களேன் ". கைகள் துறுதுறுக்க அவன் தன்னிடம் காட்டிய எண்களை பார்த்தான். அந்த எண்கள் சுருக்கென்று அவன் மனதில் குத்தியது. ஆம் அது அவனது கல்யாண நாள. அதுவும் இன்று தான் அந்த நாள். அய்யோ மனம் துடித்தது. எப்படி எங்கள் கல்யாண நாளை நான் மறந்து விட்டேன்... அந்த ஓரு கணத்தில் அவன் மனதில் கொஞ்ச நஞ்சம் இருந்த லாட்டரி ஆசையும் மங்கி அழிந்துவிட்டது. வேண்டாம் என்று அச்சிறுவனிடம் கூறிவிட்டு மருத்துவமனையை நோக்கி வேகமாக சென்றான்.
மறுநாள் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் படுக்கைக்கு அருகில் அவன் அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டிருக்கும் பொழுது, நேற்று வாங்காத அந்த லாட்டரி எணணுக்கு ஒரு லட்சம் கிடைத்திருப்பதாக பிரசுரித்திருந்தார்கள். ஆனால் அவனுக்கு அதன் மீது நாட்டமும் அல்லது இழந்துவிட்டோமே என்ற ஏமாற்றமோ சிறிதும் ஏற்படவில்லை. உழைப்புதான் உண்மையானது.. இதுப்போன்ற அதிர்ஸ்டம் வரும் என காணும் கனவுகள் நிலையில்லாதவை. நம்மையும் அழித்து, நமது குடும்ப வாழ்க்கையையும் அழித்துவிடும் என்று எண்ணமே அவன் மனதில் நிலைத்திருந்தது. மனவியின் முகத்தைப் பார்த்தான். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதியான உணர்வு.

2 comments:

Anonymous said...

Easy money goes easily Uzhaithalthan urupadiya nikkum... Excellent story.. Rajan maadhiri ellarum thirundhi, nalapadiya uzhachi munaera nenga eduthukitta muyarchiku vazhthukal..keep going...

parameswary namebley said...

Elllarum perfecta ayita ulagathula tavaru ethume nadakathu.. athau nadakuma nu enakkum theriyella.. parpom :)
nandri unggal comments ku