09 March 2008

மலேசியாவின் தேர்தல் விவரம்...


நேற்று இங்கு நடந்த மலேசியாவின் பன்னிரெண்டாவது தேர்தல் பெரும் திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. இம்மாதிரியான பல பரவலான திருப்பங்களை ஆளும் அரசாங்கம் பல வேளைகளில் எதிர் நோக்கினாலும், இவ்வருடத்தின் தோல்வியை தேசிய முன்னணி இதுவரை கண்டதில்லை.

தேசிய‌ முன்ன‌ணி க‌ட்சிக‌ள்...

இதுவ‌ரை தேசிய‌ முன்ன‌ணியின் வ‌ச‌ம் இருந்த‌ ம‌லேசியர்க‌ள், முத‌ல் முறையாக‌ அவ‌ர்க‌ளின் அதிருப்தியை த‌ங்க‌ளின் வாக்குக‌ளின் மூல‌ம் தெரிய‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள். தேசிய‌ முன்ன‌ணி சில‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணியாக‌ திக‌ழ்ந்து கொண்டிருக்கிறது.

ம‌லாய் இன‌த்திற்கு அம்னோ எனும் மலாய் க‌ட்சியும், சின‌ர்க‌ளுக்கு ம‌.சீ.ச‌ [ ம‌லேசிய‌ சீன‌ர் ச‌ங்க‌ம்] ம‌ற்றும் இந்திய‌ர்க‌ளுக்கு ‌மஇகா [ மலேசிய இந்திய காங்கிரஸ்] என‌ இன்னும் சில‌ சிறிய க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணிதான் தேசிய‌ முன்ன‌ணி.

தேர்த‌லில் போட்டியிடும் இக்கூட்ட‌ணி க‌ட்சிக‌ள் தேசிய‌ முன்ன‌ணியின் சின்ன‌த்தை வைத்துதான் போட்டியிடுவார்க‌ள்.
இப்ப‌டி மூவின‌ ம‌க்க‌ளின் பிர‌திநிதியாக‌ இருக்கும் க‌ட்சிக‌ளை கூட்டாக‌ வைத்து இதுவ‌ரை ம‌லேசியாவை ஆட்சி செய்துக் கொண்டிருந்த‌ தேசிய‌ முன்ன‌ணியின் இவ்வ‌ருட‌ வெற்றி அவ்வ‌ள‌வு திருப்திக‌ர‌மாக‌ இல்லை.

மூன்றில் இர‌ண்டு கிடைக்க‌வில்லை.

தேசிய‌ முன்ன‌ணி அர‌சாங்க‌த்தை உருவாக்குவ‌த‌ற்கான‌ த‌குதிக‌ளை பெற்றிருந்தாலும் நாடளும‌ன்ற‌த்தை மூன்றில் இர‌ண்டு ப‌குதிக‌ளை த‌க்க‌ வைத்துக் கொள்ள‌ இம்முறை த‌வ‌றிவிட்ட‌து. தேர்த‌ல்க‌ள் என்றால் வெறும் சில‌ பொய் வாக்குறுதிக‌ள் ம‌ற்றும் மேடை பேச்சுக‌ள் என‌ அனைவ‌ரும் எண்ணியிருந்த‌ வேளையில், ம‌க்க‌ள தங்கள் உள்ள‌க் குமு‌ற‌ல்க‌ளையும் அவ‌ர்க‌ள் செவி சாய்க்க‌ வேண்டும் என‌ த‌ங்க‌ளின் ஓட்டுக‌ளின் மூல‌ம் தெரிய‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள் என‌லாம்.
219 இருக்கைக‌ளில் தேசிய‌ முன்ன‌ணி இதுவ‌ரை 137 இட‌ங்களைக் கைப்ப‌ற்றி அர‌சாங்க‌த்தை உருவாக்குவ‌த‌ற்கான‌ த‌குதியை பெற்றுள்ள‌து. எதிர் க‌ட்சியின‌ர் இதுவ‌ரை 82 இடங்களை கைப்ப‌ற்றி தே.மு மூன்றில் இர‌ண்டு நாடாளும‌ன‌றத்தை ஆட்சி செய்யாம‌ல் த‌டுத்திருக்கிறார்க‌ள்.
அமைச்ச‌ர்க‌ளின் தோல்விக‌ள்

இத்தேர்த‌லில் மூன்று அமைச்ச‌ர்க‌ளும் ஐந்து துணை அமைச்ச‌ர்க‌ளும் தோல்வியை த‌ழுவினார்க‌ள். கெர‌க்கான் க‌ட்சி த‌லைவ‌ர் [ டான்ஸ்ரீ கோ] , பிபிபி க‌ட்சியின் த‌லைவ‌ர், ட‌த்தோ கேவிய‌ஸ் ம‌ற்றும் ம‌.இ.கா வின் த‌லைவ‌ர் ட‌த்தோஸ்ரீ சாமிவேலு என‌ தேசிய‌ முன்ன‌ணியின் கூட்ட‌னி க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் எதிர்பாராத‌ தோல்வியை க‌ண்டிருக்கிறார்க‌ள்.
மஇகாவின் மூன்று நாடாளூம‌ன்ற‌ வேட்பாளர்க‌ளும் ஏழு ச‌ட்ட‌ம‌ன்ற‌ வேட்பாள‌ர்க‌ளும் ம‌ட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்க‌ள்.இதுவ‌ரை 100 ச‌த‌விகித‌ வெற்றியை ம‌ட்டுமே மஇகா க‌ண்டிருந்த‌து.
ஐந்து மாநிலங்கள் எதிர்கட்சியினர் கையில்

பினாங்கு, சிலாங்கூர்,கெடா,ம‌ற்றும் பெர்லீஸ் மாநில‌ங்க‌ள் முத‌ல் முறையாக‌ எதிர் க‌ட்சி கூட்ட‌ணிக்கு மாறிய‌து. எப்பொழுதும் போல‌ கிள‌ந்தான் மாநில‌த்தை பாஸ் [PAS] த‌க்க‌ வைத்துக்கொண்ட‌து.
தே.மு ப‌ல‌மாக‌ எண்ணியிருந்த‌ சிலாங்கூர் மாநில‌ம் இன்று எதிர்க‌ட்சி கூட்ட‌ணியில் இருப்ப‌து அதிர்ச்சியான‌ செய்தி என‌ கூறியிருக்கிறார் ட‌த்தோஸ்ரீ அப்துல்ல‌ ப‌டாவி.

ம‌க்க‌ள் ச‌க்தி / ஹீண்றாப்

இந்திய‌ர்க‌ளின் நிலையைக் குறித்து ந‌டைபெற்ற‌ அமைதி ஊர்வ‌ல‌த்தின் தாக்க‌ம் இந்த‌ தேர்த‌லின் முடிவுக‌ளில் தெரிகிற‌து. ஹீண்றாப் த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் மனோக‌ர‌ன் வெற்றிப் பெற்றுள்ளார். அவ‌ர் இன்னும் உள்நாட்டு பாதுகாப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் சிறையில் த‌டுத்து வைத்துள்ளார் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

2 comments:

ssang said...

நல்ல விரிவுரையாளர் ஆகலாம் ;)

Sasikala.C said...

Very expressive and transparent. I gained some information about Malaysian government.