12 November 2006

*மனநிறைவு *

அது என்ன மன நிறைவு? அதை எப்படி நாம் அடைய முடியும்? அனைவராலும் அதை அடைய முடியுமா? கண்டிப்பாக இவ்வுலகில் உள்ள அனைவராலும் மன நிறைவை அடைய முடியும். ஆனால் எவ்வளவு சீக்கிரம் ஒருவரால் இவற்றை அடைய முடியும் என்று கேள்வி எழுப்பினால் அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

சிலர் காலையில் இறை வணக்கம் செய்யாவிடில் மன நிறைவு அடைய மாட்டார்கள். இன்னும் சிலர் ஒரு நாள் தேநீர் அருந்தாவிடில் அன்று எதையோ இழந்த மாதிரி தவிப்புடன் இருப்பார்கள். இன்னும் சிலரோ அவர்களின் அன்றாட கடமைகளில் ஒன்றை செய்யாவிடில் அன்றைய பொழுது நன்றாக இருக்காத மாதிரி உணர்வார்கள்.

சரி என்னடா இவள் ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாளே என்று எண்ணுகிறீர்களா? ஒன்றும் பெரிய விசயம் இல்லை. சில நாட்களுக்கு முன் நான் அடைந்த மன நிறைவை பற்றி எழுதலாம் என்ற ஒரு சின்ன ஆசைதான். இவள் இன்னும் அயர்லந்து பற்றி எழுதாமல் வேறு ஏதேதோ எழுதராளேன்னு கேட்பது நன்றாகவே புரிகிறது. ஆனால் இதை முதலில் எழுதினால் தான் என் மனது நிறைவு அடையும்.

வெளியூர் பயணம் முடிந்து அலுவலதிற்கு சென்றப் பொழுது வழக்கத்தை விட மலை மாதிரி வேலைகள் குவிந்து கிடந்தன. என்ன செய்ய, எல்லாம் வழக்கம்போலத்தான்? எப்படியும் இரவும் பகலும் உட்கார்ந்து செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை.

எனது நண்பர்கள் வட்டம் என்னக்கு ஒன்றை நினைவு படுத்தினார்கள். நான் வெளியூர் செல்லும் முன்னரே இந்த செயலில் ஈடுபட்டேன். ஆனால் நான் வந்து மறுவாரம் இதை எங்கள் குழு செயல்படுத்த எண்ணியிருந்தார்கள்.
எவ்வளவு மன மகிழ்ச்சி, மலைபோல குவிந்துக் கிடக்கும் பல வேலைகளுக்கு இடையில் நாங்கள் சிறு கலந்துரையாடல் செய்து அந்த நிகழ்ச்சியை எப்படி நல்ல முறையில் நடத்த வழி வகுத்தோம் என்பதே அது.
தேவையானவற்றை செய்து முடித்தாகி விட்டது. இனி நாளை காலை எங்கள் திட்டத்தின்படி அந்த இல்லத்திற்கு செல்ல வேண்டியது தான். எந்த இல்லம்? எங்கு செல்லப் போகிறார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சரி இனியும் ரகசியம் வேண்டாம். இதோ சொல்லிவிடுகிறேன்.

ஒரு அன்பு இல்லத்திற்கு நாங்கள் செல்லப் போகிறோம். அங்கு இருக்கும் சின்னஞ்சிறுசிட்டுகளுக்கு வலைத்தளம் செய்வது எப்படி என்று சொல்லித்தர போகின்றோம்.

என்ன அன்பு இல்லமா? அது என்ன? எங்கே இருக்கிறது? இன்னும் கேள்விகள் தொடர்கின்றனவா? எங்கு அன்பு நிறைந்து இருக்கின்றதோ அதுதான் அன்பு இல்லமும் கூட. நான் கூறும் இந்த இல்லம் சற்று சிறப்பு வாய்ந்த அன்பு இல்லம். பல நாடுகளில் இருக்கின்றன. பலரால் செய்ய இயலாத காரியங்களை இங்குள்ளவர்கள் செய்கிறார்கள்.

அப்படி என்ன செயல்? அன்புக்காக ஏங்கி நிற்கும் பல பிஞ்சு உள்ளங்களை கட்டி காப்பாற்றுவது என்ன எளிதான செயலா? ஒன்று அதற்கு மனம் வேண்டும், இன்னொன்று அதை செயல் படுத்த துணிவு வேண்டும். பலர் வேண்டாம் என்று தூக்கி எறிந்த மலர்களையும், மொட்டுகளையும் இங்கு பராமரிக்கிறார்கள்.

என்ன இவள் எதையும் புரியும்படி எழுத மாட்டாளா என்று நீங்கள் முனகுவதும் என் காதில் விழுகிறது. இதோ சொல்லிவிட்டேன்.. நான் கூறியது அனாதை இல்லங்களைப் பற்றிதான். அந்த சொல் பிடிக்கவில்லை. ஆகவே அன்பு இல்லம் என்று கூறினேன். அப்பாடா! எங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சிலர் இந்த நல்லச் செயலில் ஈடுபட்டு இருந்தார்கள். ஒரு அன்பு இல்லத்தை தேர்ந்தெடுத்து அங்கு உள்ள சில மாணவர்களுக்கு எங்களுக்கு தெரிந்த அளவு எப்படி வலைப்பகுதி வடிவமைப்பது என்பதுப் பற்றி சொல்லித்தரலாம் என்ற ஒரு எண்ணம். இதில் விருப்பம் உள்ளவர்கள் இந்த செயலில் ஈடுபடலாம் என்று மடல வந்தது தான் தாமதம். எங்கள் நண்பர்கள் வட்டம் எல்லோரும் ஆர்வத்துடன் குவிந்து விட்டார்கள்.
வாரவாரம் நடக்கும் கூட்டத்திற்கு சென்றோம். பல இன்னல்களை நாங்கள் எதிர்நோக்கினோம். முதலில் அந்த அன்பு இல்லத்தில் கணினி பற்றாக்குறை. சிலர் அதற்கான வேலைபளுவினை எடுத்துக் கொண்டார்கள். பிறகு இன்னும் சிலர் சிறுவர்களுக்கு பாடங்களை போதிக்கும் கடமையை எடுத்துக் கொண்டார்கள். சில வருடங்களாக நானும் சில மாணவர்களுக்கு எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்துக் கொள்வதால் நானும் என் நண்பர்களும் போதிக்கும் கடமையை ஏற்றுக் கொண்டோம். இடையில் என்னால் இந்த நடவடிக்கைக்கு நேரடியாக செல்ல இயலாமல் போனது. ஆனால் என் நண்பர்கள் அன்றாடம் நடக்கும் முக்கிய விசயங்களை என்னிடம் கூறுவார்கள். எங்கள் குழு அந்த இல்லத்திற்கு செல்லவேண்டிய நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. நானும் இந்தப் பணியில் நேரடியாக கலந்துக் கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன்.

ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. சனிக்கிழமை காலை, எழுந்து சுறுசுறுப்புடன் செயல் பட்டேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் சந்திக்கும் பெருமாளை இன்று சந்திக்க முடியாது என்ற சஞ்சலம். அதில் என்ன இருக்கிறது மகளே, அடுத்த வாரம் நாம் சந்திக்கலாம் என்று எனக்கு அன்புடன் விடைக் கொடுத்தார், அவர். ஷீடா, கம் ஹோங் மற்றும் புஷ்பா, நாங்கள் எப்பொழுதும் சந்திக்கும் இடத்தில் எனக்காக காத்திருந்தார்கள். என்னை சிறுவர்களுக்காக சில உணவு பொருட்களை வாங்கி வர சொல்லி இருந்தார்கள் . நானும் நேற்று இரவே அங்காடிக்குச் சென்று சில திண்பண்டங்களை வாங்கி வைத்து விட்டேன்.
பிறகு எல்லோரும் அந்த அன்பு இல்லத்தை நோக்கிச் சென்றோம். அதன் பெயர் ரேக்தார். அந்த இல்லத்தின் அலுவலகதிற்கு முதலில் சென்றோம். அங்கு ஒரு ஆடவரும் ஒரு பெண்மணியும் அவர்களுடைய வேலையில் கவனமாக இருந்தார்கள். எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். எங்கள் அலுவலகத்தின் பெயரைக் கூறியதும் எங்களை அமரசொல்லிவிட்டு, மாணவர்களை அழைக்கச் சென்று விட்டார் அந்த பெண்மணி. அந்த ஆடவரும் எங்களிடம் சற்று உரையாடிவிட்டு அவரது வேலையில் மூழ்கிவிட்டார்.

என் நண்பர்களும் அங்கிருந்த நாளிதழ்களில் மூழ்கி விட்டார்கள். என்னால் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க முடியவில்லை. எழுந்து அங்கிருந்த அறிவிப்பு பலகையில் இருந்த சில புள்ளி் விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அந்த அன்பு இல்லத்தைப்பற்றி் சேகரித்த விவரங்களை விட இந்த விவரங்கள் வேறுபட்டு இருந்தன. இன்னும் பல புதிய விவரங்களும் கிடைத்தன. ஆக மொத்த சிறுவர்கள் 59. அனைவரும் பெண்கள். மாநில வாரியாக அங்குள்ளவர்களை பிரித்து வைத்திருந்தார்கள். நான் வசிக்கும் மாநிலம் தான் அதில் முதலிடம் வகித்தது. பெருமைப் பட வேண்டிய விசயம் அல்லவே. அந்த விவரம் எதைக் குறிக்கின்றது? எங்கள் மாநிலத்தில்தான் பண்பில்லாதவர்கள் பாசமில்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றல்லவா காட்டுகிறது. மனம் மிகவும் சங்கடப்பட்டது. வேதனையில் தொண்டை அடைத்தது.

பிள்ளைகள் கணினி அறையில் தயாராக இருக்கிறார்கள் என்று அந்த பெண்மணி வந்து கூறினார். நாங்களும் சற்று தயக்கத்துடன் அங்கு சென்றோம். என்ன தயக்கம் என்றால் எங்கள் நால்வருக்கும் இம்மாதிரியான அன்பு இல்லங்களுக்கு வருவது இது தான் முதல் அனுபவம். இந்த சின்னஞ் சிறு உள்ளங்களிடம் எப்படி பேசுவது? எப்படி பழகுவது? அவர்கள் மன நிலை எப்படி இருக்கும்? இம்மாதிரியான பல கேள்விகளுடன் அந்த அறைக்கு சென்றோம்.

விஸ்தாரமான அறை. அதில் ஆறு கணினிகள். அவற்றில் மூன்றில் "பழுது" என்று அட்டை ஒட்டப் பட்டிருந்தது. இன்னும் மூன்றில் இரண்டு மட்டுமே செயல் பட்டுக் கொண்டிருந்தது. மூன்றாவதில் ஏதோ கோளாறு. வந்த மாணவர்களின் எண்ணிக்கை இருபது. ம்ம் இரண்டு கணினி இருபது மாணவர்கள். என்ன செய்ய? நண்பர் கம் ஹோங் அவருடைய அலுவலக கணினியை எடுத்து வந்திருந்தார். அதனையும் அவர்களுக்குப் பயன்படுத்த கொடுத்தோம்.

ஆரம்பத்தில் நாங்கள் நால்வரும் தயங்கி நின்றிருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். பிறகு அவர்களை அறிமுகம் செய்ய சொன்னோம். முதலில் எங்களிடமிருந்து சற்றுத் தள்ளி தயக்கத்துடன் இருந்தவர்கள் நாங்கள் அவர்களுக்கு புது புது உத்திகளை கற்று கொடுக்க தொடங்கியவுடன் தயக்கம் அகன்று ஆர்வத்துடன் நெருங்கி வந்தனர்.

நாங்கள் சொல்லித்தருவதை மிகவும் கவனத்துடன் கேட்டனர்.
இடையிடையே அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எங்களிடம் கேட்டு தெளிவுப் பெற்றனர். புதிதாக பல கேள்விகளும் கேட்டனர். அவர்களின் ஆர்வம் எங்களையும் தொற்றிக்கொண்டது. மனதில் மகிழ்ச்சியுடன் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தோம். நேரம் ஆக ஆக மனதில் லேசான ஒரு கவலை வளர ஆரம்பித்தது.

ஏன் என்று கேட்கிறீர்களா? அவர்களை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற கவலைதான். என்ன செய்வது பிரிந்து தானே ஆகவேண்டும். கடைசியில் நாங்கள் எங்களுடன் எடுத்துச்சென்ற உணவுப் பொருட்களை அவர்களுக்கு கொடுத்து விட்டு அவர்களுடன் சேர்ந்துப் புகைப்படங்கள் எடுத்து விட்டு பிரிய மனமில்லாமல் அவர்களிடமிருந்து பிரிந்தோம். அவர்களுக்கும் அதே நிலை.

நாங்கள் அவர்களுடன் பகிர்ந்துக் கொண்ட நேரம் மிக மிக குறைவு என்றாலும் அவர்களுடன் பழகிய அந்த சில மணி நேரங்கள் எங்கள் மனதில் ஏதோ ஒரு இனம் தெரியாத உணர்ச்சியையும் ஆழ்ந்த திருப்தியையும் உண்டாகியது என்னவோ நிஜம்.

இப்படி அன்றாட வார இறுதியை பயனுள்ள வகையில் கழித்தோமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று திரும்பும் போது என் மனம் ஏனோ நினைக்க ஆரம்பித்தது......


அன்புடன்,
பரமேஸ்வரி
Parameswary
Life is A Box of Chocolates
We never know what to expect next.....

1 comment:

Anonymous said...

நல்ல சமூக தொண்டு. வாய்ப்பு கிடைத்தால் நாமும் ஒரு நாள் செல்வோம்.